TAMIL
ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட்டில் வங்காளதேச அணி முதல் முறையாக ‘சாம்பியன்’: இந்தியாவுக்கு அதிர்ச்சி அளித்தது
16 அணிகள் பங்கேற்ற 13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்குட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வந்தது.
இதில் போட்செப்ஸ்ட்ரூமில் நேற்று நடந்த இறுதி ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான இந்திய அணி, வங்காளதேசத்துடன் மோதியது.
‘டாஸ்’ ஜெயித்த வங்காளதேசம் முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தது.
இதன்படி யஷாஸ்வி ஜெய்ஸ்வாலும், திவ்யான்ஷ் சக்சேனாவும் இந்தியாவின் இன்னிங்சை எச்சரிக்கையுடன் ஆரம்பித்தனர்.
முதல் 4 ஓவர்களில் 3 ஓவர் மெய்டன் ஆனது.
சக்சேனா 2 ரன்னில் (17 பந்து) கேட்ச் ஆனார். அடுத்து திலக் வர்மா, ஜெய்ஸ்வாலுடன் ஜோடி சேர்ந்தார்.
இடக்கை வேகப்பந்து வீச்சாளர் ஷோரிபுல் இஸ்லாம் ஆக்ரோஷமாகவும், துல்லியமாகவும் பந்து வீசி அச்சுறுத்தினார்.
இதே போல் மற்ற பவுலர்களும் நெருக்கடி அளிக்க, இந்திய பேட்ஸ்மேன்கள் தடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தினர்.
இதனால் ஸ்கோர் மந்தமானது. பந்து எல்லைக்கோடு பக்கம் செல்வதே அபூர்வமாக தெரிந்தது.
முதல் 25 ஓவர்களில் 6 பவுண்டரி மட்டுமே அடிக்கப்பட்டன. 28.2 ஓவரில் இந்திய அணி 100 ரன்களை கடந்தது.
அணியின் ஸ்கோர் 103 ரன்களை எட்டிய போது திலக் வர்மா (38 ரன்) ஷாட்பிட்ச் பந்தில் கேட்ச் ஆனார்.
அடுத்து வந்த கேப்டன் பிரியம் கார்க் (7 ரன்) நிலைக்கவில்லை.
இன்னொரு பக்கம் நிலைத்து நின்று நேர்த்தியாக ஆடிய ஜெய்ஸ்வால் 88 ரன்களில் (121 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), ஷோரிபுல் பந்து வீச்சில் சிக்கினார்.
இதன் பிறகு மோசமான ஷாட்டுகளால் இந்தியாவின் விக்கெட்டுகள் சீட்டு கட்டு போல் சரிந்தன.
விக்கெட் கீப்பர் துருவ் ஜூரெல் (22 ரன்) தேவையில்லாமல் ரன்-அவுட் ஆக, இந்தியாவின் உத்வேகம் முற்றிலும் சீர்குலைந்தது.
இந்திய அணி 47.2 ஓவர்களில் 177 ரன்னில் சுருண்டது.
நடப்பு தொடரில் இந்தியா ஆல்-அவுட் ஆனது இதுவே முதல் முறையாகும்.
இந்திய அணி கடைசி 21 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை தாரைவார்த்தது.
வங்காளதேசம் தரப்பில் அவிஷேக் தாஸ் 3 விக்கெட்டுகளும், ஷோரிபுல் இஸ்லாம், தன்ஜிம் ஹசன் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
அடுத்து எளிய இலக்கை நோக்கி இறங்கிய வங்காளதேச பேட்ஸ்மேன்கள் முதல் ஓவரிலேயே 13 ரன்களை சேகரித்தனர்.
தொடக்க வீரர்கள் 8.2 ஓவர்களில் 50 ரன்கள் எடுத்து சிறப்பான தொடக்கம் அமைத்து தந்தனர்.
ஒரு வழியாக தொடக்க ஜோடியை சுழற்பந்து வீச்சாளர் ரவி பிஷ்னோய் பிரித்தார்.
அவரது பந்து வீச்சில் தன்ஜித் ஹசன் (17 ரன்) கேட்ச் ஆனார்.
பிஷ்னோயின் பந்து நன்கு சுழன்று திரும்பியதால், வங்காளதேச பேட்ஸ்மேன்கள் மிரண்டனர்.
மமுதுல் ஹசன் (8 ரன்), தவ்ஹித் ஹிரிடாய் (0), ஷகதத் ஹூசைன் (1 ரன்) ஆகியோரும் அவரது சுழலில் சிக்கினர்.
மிடில் வரிசையில் கேப்டனும், விக்கெட் கீப்பருமான அக்பர் அலி, நம்பிக்கை தளராமல் மனஉறுதியுடன் போராடினார்.
ஒரு பக்கம் விக்கெட் விழுந்தாலும் குறைந்த ஸ்கோர் என்பதால் அவசரப்படாமல் ஏதுவான பந்துகளை விரட்டியடித்தார்.
இதற்கிடையே மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் பர்வேஸ் ஹூசைன் இமான் இடது காலில் ஏற்பட்ட தசைப்பிடிப்பால் 25 ரன்னில் இருந்த போது வெளியேறினார்.
பிறகு சிகிச்சை எடுத்துக் கொண்டு மறுபடியும் களம் கண்ட அவர் தனது பங்குக்கு 47 ரன்கள் (79 பந்து, 7 பவுண்டரி) எடுத்து அவுட் ஆனார்.
அப்போது வங்காளதேசம் 143 ரன்களுக்கு 7 விக்கெட்டை இழந்து பரிதவித்தது.
ஆனாலும் ரன்தேவை குறைவாக இருந்ததால், கேப்டன் அக்பர் அலி, ரகிபுல் ஹசனின் துணையுடன் ஸ்கோரை கொஞ்சம் கொஞ்சமாக நகர்த்தினார்.
அந்த அணி 41 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்திருந்த போது மழை குறுக்கிட்டது.
சிறிது நேரம் மழை பாதிப்பு காரணமாக டக்வொர்த்-லீவிஸ் விதிமுறைப்படி 46 ஓவர்களில் 170 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற இலக்கு திருத்தப்பட்டது.
இந்த இலக்கை வங்காளதேச அணி 42.1 ஓவர்களில் எட்டிப்பிடித்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்து, முதல்முறையாக உலக கோப்பையை சொந்தமாக்கியது.
அக்பர் அலி 43 ரன்னுடனும் (77 பந்து, 4 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரகிபுல் ஹசன் 9 ரன்னுடனும் (25 பந்து) அவுட் ஆகாமல் இருந்தனர்.
வங்காளதேச அணி உலக அளவிலான போட்டிகளில் வென்ற முதல் மகுடம் இது தான்.
இந்த வெற்றியை அந்த நாட்டு ரசிகர்கள் திருவிழா போல் கொண்டாடி மகிழ்ந்தனர்.
தோல்வியே சந்திக்காமல் கம்பீரமாக இறுதிசுற்றை அடைந்த 4 முறை சாம்பியனான இந்திய அணி, கடைசி நேரத்தில் கோட்டைவிட்டது.
வங்காளதேச கேப்டன் அக்பர் அலி ஆட்டநாயகன் விருதையும், இந்திய வீரர் ஜெய்ஸ்வால் தொடர்நாயகன் விருதையும் பெற்றனர்.