TAMIL

ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் அரை இறுதியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று பலப்பரீட்சை

13-வது ஜூனியர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி (19 வயதுக்கு உட்பட்டோர்) தென்ஆப்பிரிக்காவில் நடந்து வருகிறது.

இதில் போர்ட்செஸ்ட்ரூமில் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெறும் முதலாவது அரைஇறுதிப்போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

4 முறை சாம்பியனான இந்திய அணி தொடர்ச்சியாக 3-வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறும் முனைப்பில் உள்ளது.

இந்திய அணி லீக் ஆட்டங்களில் இலங்கை, ஜப்பான், நியூசிலாந்து அணிகளையும் கால்இறுதியில் ஆஸ்திரேலியாவையும் வீழ்த்தி அரைஇறுதிக்குள் நுழைந்தது.

ரோகைல் நசிர் தலைமையிலான பாகிஸ்தான் அணி லீக் ஆட்டங்களில் ஸ்காட்லாந்து, ஜிம்பாப்வே அணிகளை வென்றது. வங்காளதேசத்துக்கு எதிரான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது.



கால்இறுதியில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.

பிரியம் கார்க் தலைமையிலான இந்திய அணி பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் வலுவாக உள்ளது. தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 3 அரைசதம் அடித்து நல்ல நிலையில் உள்ளார்.

பந்து வீச்சில் வேகப்பந்து வீச்சாளர் கார்த்திக் தியாகி கலக்கி வருகிறார். 2 முறை சாம்பியனான பாகிஸ்தான் அணியில் பந்து வீச்சாளர்கள் முகமது அமிர்கான், அப்பாஸ் அப்ரிடி, தாஹிர் ஹூசைன் ஆகியோர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள்.

அவர்கள் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருப்பார்கள்.

இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் என்றால் எப்பொழுதும் அனல் பறக்கும். எனவே இந்த ஆட்டத்திலும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.

ஜூனியர் உலக கோப்பை போட்டியில் இவ்விரு அணிகளும் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன.

இதில் பாகிஸ்தான் அணி 5 முறையும், இந்திய அணி 4 தடவையும் வென்றுள்ளன.

கடந்த (2018) ஜூனியர் உலக கோப்பை போட்டியின் அரைஇறுதியில் இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந் தது.



அதற்கு பதிலடி கொடுக்க பாகிஸ்தான் அணி முயற்சிக்கும்.

இந்த போட்டி தொடரில் சிறப்பாக செயல்பட்டு வரும் இந்திய அணி இந்த மோதலில் பதற்றமின்றி செயல்பட்டால் பாகிஸ்தானை பந்தாட முடியும்.

இந்திய நேரப்படி பகல் 1.30 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 3 சேனல் நேரடியாக ஒளிபரப்பு செய்கிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker