TAMIL
ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: வங்காளதேசத்தை வீழ்த்தி இந்தியா ‘சாம்பியன்’
8-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் (19 வயதுக்குட்பட்டோர்) போட்டி இலங்கையில் கடந்த 10 நாட்களாக நடந்து வந்தது. 8 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நடப்பு சாம்பியன் இந்தியாவும், வங்காளதேசமும் இறுதிப்போட்டிக்கு முன்னேறின
கொழும்பு பிரேமதாசா ஸ்டேடியத்தில் நேற்று அரங்கேறிய இறுதி ஆட்டத்தில் டாஸ் ஜெயித்து முதலில் பேட் செய்த இந்திய அணி 32.4 ஓவர்களில் 106 ரன்னில் சுருண்டது. கரன் லால் (37 ரன்), கேப்டன் துருவ் ஜூரல் (33 ரன்), ரவத் (19 ரன்) தவிர மற்ற அனைவரும் ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்தனர்.
எளிய இலக்கை நோக்கி களம் புகுந்த வங்காளதேச பேட்ஸ்மேன்களை இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் 18 வயதான அதர்வா அன்கோலெகர் மிரட்டினார். அவரது சுழலில் சிக்கி திணறிய வங்காளதேசம் 33 ஓவர்களில் 101 ரன்னில் அடங்கியது. இதன் மூலம் இந்தியா 5 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்து பட்டத்தை தக்க வைத்துக் கொண்டது.
அதர்வா அன்கோலெகர் 8 ஓவர்களில் 2 மெய்டனுடன் 28 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை அள்ளினார். அவருக்கு பக்கபலமாக இருந்த வேகப்பந்து வீச்சாளர் ஆகாஷ் சிங் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்திய பவுலர்கள் 12 வைடு உள்பட எக்ஸ்டிரா வகையில் 18 ரன்களை தாரைவார்த்து விட்டனர். இல்லாவிட்டால் வங்காளதேசம் இரட்டை இலக்கத்திலேயே முடங்கி இருக்கும்.
ஜூனியர் ஆசிய கோப்பை இறுதி ஆட்டத்தில் குறைந்த ஸ்கோரை வைத்துக் கொண்டு மகுடம் சூடிய அணி என்ற பெருமையை இந்தியா பெற்று இருக்கிறது.
நடப்பு தொடரில் தோல்வியே சந்திக்காத இந்திய அணி இந்த பட்டத்தை வெல்வது இது 7-வது முறையாகும். அதே சமயம் முதல் முறையாக ஆசிய கோப்பையை வெல்லும் முனைப்பில் இருந்த வங்காளதேசத்தின் கனவு நூலிழையில் தகர்ந்து போனது.
ஆட்டநாயகன் விருதை சுழற்பந்து வீச்சாளர் அதர்வா அன்கோலெகரும், தொடர் நாயகன் விருதை இந்திய தொடக்க ஆட்டக்காரர் அர்ஜூன் ஆசாத்தும் (ஒரு சதம் உள்பட 202 ரன்) பெற்றனர்.