TAMIL

ஜிம்பாப்வேக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட்டில் வங்காளதேச வீரர் லிட்டான்தாஸ் 176 ரன்கள் குவித்து சாதனை

வங்காளதேசம் – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சைல்ஹெட்டில் நேற்று நடந்தது.

இதில் முதலில் பேட் செய்த வங்காளதேச அணியில் தொடக்க ஆட்டக்காரர்கள் தமிம் இக்பாலும், விக்கெட் கீப்பர் லிட்டான்தாசும் ரன்வேட்டை நடத்தி உள்ளூர் ரசிகர்களை குஷிப்படுத்தினர்.



33.2 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 182 ரன்கள் எடுத்திருந்த போது மழை பெய்தது. இதனால் ஆட்டம் 43 ஓவர்கள் கொண்டதாக குறைக்கப்பட்டது.

தொடர்ந்து ரன்மழை பொழிந்த இவர்கள் சதத்தை கடந்தனர். லிட்டான் தாஸ் 3-வது சதத்தையும், தமிம் இக்பால் 13-வது சதத்தையும் எட்டினர்.

அணியின் ஸ்கோர் 292 ரன்களாக (40.5 ஓவர்) உயர்ந்த போது லிட்டான் தாஸ் 176 ரன்களில் (143 பந்து, 16 பவுண்டரி, 8 சிக்சர்) கேட்ச் ஆனார்.

ஒரு நாள் போட்டியில் வங்காளதேச வீரர் ஒருவரின் அதிகபட்ச ரன் இதுவாகும். முந்தைய ஆட்டத்தில் தமிம் இக்பால் 158 ரன்கள் எடுத்ததே இதற்கு முன்பு அதிகபட்சமாக இருந்தது.

அச்சாதனையை லிட்டான் தாஸ் முறியடித்தார். மேலும் விக்கெட் ஒன்றுக்கு வங்காளதேச ஜோடி திரட்டிய மெகா பார்ட்னர்ஷிப்பாகவும் (292 ரன்) இது பதிவானது.

ஒட்டுமொத்தத்தில் பார்த்தால் முதல் விக்கெட்டுக்கு எடுக்கப்பட்ட 3-வது அதிகபட்சமாகும்.



நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்களில் வங்காளதேச அணி 3 விக்கெட்டுக்கு 322 ரன்கள் குவித்தது. தமிம் இக்பால் 128 ரன்களுடன் (109 பந்து, 7 பவுண்டரி, 6 சிக்சர்) களத்தில் இருந்தார்.

பின்னர் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி 43 ஓவர்களில் 342 ரன்கள் எடுக்க வேண்டும் என்று ஜிம்பாப்வேக்கு இலக்கு மாற்றி அமைக்கப்பட்டது.

அதை நோக்கி ஆடிய ஜிம்பாப்வே 37.3 ஓவர்களில் 218 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இதன் மூலம் 123 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்காளதேச அணி தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக வசப்படுத்தியது.

இந்த ஆட்டத்துடன் வங்காளதேச அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து மோர்தசா விலகினார்.



மோர்தசா தலைமையில் வங்காளதேச அணிக்கு கிடைத்த 50-வது வெற்றி இதுவாகும்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker