ஐபிஎல் தொடரின் 19-வது லீக் ஆட்டம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் டோனி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ருத்துராஜ் கெய்க்வாட், டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
இந்த ஜோடி 10-வது ஓவரின் முதல் பந்தில் பிரிந்தது. 9.1 ஓவரில் 74 ரன்கள் எடுத்திருக்கும்போது ருத்துராஜ் கெய்க்வாட் 25 பந்தில் 33 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து சுரேஷ் ரெய்னா களம் இறங்கினார். அவர் 18 பந்தில் 24 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். டு பிளிஸ்சிஸ் 40 பந்தில் அரைசதம் அடித்து, அடுத்த பந்தில் ஆட்டமிழந்தார். அப்போது சிஎஸ்கே 13.5 ஓவரில் 111 ரன்கள் எடுத்திருந்தது. இருவரின் விக்கெட்டையும் ஒரே ஓவரில் ஹர்சல் பட்டேல் வீழ்த்தினார்.
அதன்பின் சிஎஸ்கே-வின் ரன் குவிக்கும் உத்வேகத்தில் தடுமாற்றம் ஏற்பட்டது. ஜடேஜா டக்அவுட்டில் இருந்து தப்பித்து ஓரளவிற்கு தாக்குப்பிடித்து விளையாடினார். அம்பதி ராயுடு 7 பந்தில் 14 ரன்கள் எடுத்து ஹர்சல் பட்டேல் பந்தில் வீழந்தார். அப்போது சிஎஸ்கே 17.3 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 142 ரன்கள் எடுத்திருந்தது.
19-வது ஓவரை முகமது சிராஜ் வீசினார். இந்த ஓவரில் ஒரு பவுண்டரியுடன் 9 ரன்கள் அடித்தது. கடைசி ஓவரை ஹர்ஷல் பட்டேல் வீசினார். முதல் மூன்று பந்துகளையும் சிக்சருக்கு விளாசினார் ஜடேஜா. இதில் 3 பந்து நோ-பால் ஆகும். அதற்குப்பதிலாக வீசிய பந்திலும் சிக்ஸ் அடித்தார். அத்துடன் 26 பந்தில் 3 பவுண்டரி, 4 சிக்சருடன் அரைசதம் அடித்தார்.
ஐந்தாவது பந்தையும் சிக்சருக்கு தூக்கினார் ஜடேஜா. கடைசி பந்தை பவுண்டரிக்கு விரட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் 4 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்கள் குவித்தது. கடைசி ஒவரில் ஜடேஜா 36 ரன்கள் விளாசினார். நோ-பாலில் ஒரு ரன் கிடைக்க ஹர்சல் பட்டேல் 37 ரன்கள் விட்டுக்கொடுத்தார்.
ஜடேஜா 28 பந்தில் 4 பவுண்டரி, 5 சிக்சருடன் 62 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஹர்சல் பட்டேல் 4 ஓவரில் 51 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.