TAMIL
சொந்த மண்ணில் கேப்டன் மலிங்காவுக்கு கடைசி வாய்ப்பு? மேற்கிந்திய தீவுகளுடனான டி-20 தொடரில் பலப்பரீட்சை
இம்மாத இறுதியில் தொடங்கவுள்ள மேற்கிந்திய தீவுகளுடனான டி-20 தொடரில் இலங்கை அணியை லசித் மலிங்கா வழிநடத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இம்மாதம் இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள மேற்கிந்திய தீவுகள் அணி, 3 ஒரு நாள் மற்றும் 2 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடவுள்ளது.
இரு அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி பெப்ரவரி 22ம் திகதி கொழும்பில் நடைபெறும்.
மேற்கிந்திய தீவுகள் உடனான ஒரு நாள் மற்றும் டி-20 தொடருக்கு 20 வீரர்களைக் கொண்ட இலங்கை அணியைத் தேர்ந்தெடுத்ததை தலைமை தேர்வாளர் அசாந்தா டி மெல் உறுதிப்படுத்தினார்.
இந்தத் தொடருக்காக நாங்கள் 20 பேர் கொண்ட அணியைத் தேர்ந்தெடுத்துள்ளோம். பெப்ரவரி 17ம் திகதிக்குள் வீரர்களின் எண்ணிக்கை 15 ஆக குறைக்கப்படும் என்று டி மெல் கூறினார்.
விளையாட்டு அமைச்சரின் ஒப்புதலுக்காக நாங்கள் வீரர்களின் பட்டியலை அனுப்பியுள்ளதால், அணித்தலைவர் குறித்து கருத்து தெரிவிக்க முடியாது என கூறினார்.
கடந்த மாதம் இந்தியாவுக்கு எதிரான டி-20 தொடரை 2-0 என்ற இழந்ததைத் தெடர்ந்து, இலங்கை அணியின் தோல்விக் பொறுப்பேற்றுக் கொண்ட மலிங்கா, பதவி விலகத் தயாராக இருப்பதாக கூறினார்.
எவ்வாறாயினும், தோல்வியுற்ற போக்கை மாற்றியமைக்க மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக 36 வயதான லசித் மலிங்காவிற்கு அணித்தலைவராக இறுதி வாய்ப்பளிக்க முடிவெடுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரம் தகவல் தெரிவித்துள்ளது.
அதே சமயம் மலிங்காவிற்கு மாற்றாக தசுன் சானக்க அல்லது குசல் பெரேராவை அணித்தலைவர் பதவிக்கு இலங்கை கிரிக்கெட் வாரியம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.