CRICKETLATEST UPDATESNEWSTAMIL
சேப்பாக்கம் டெஸ்ட்: 2-வது இன்னிங்சில் இங்கிலாந்து 178-ல் ஆல்அவுட்- இந்தியாவுக்கு 420 ரன்கள் வெற்றி இலக்கு
இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து 578 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக ஜோ ரூட் 218 ரன்கள் விளாசினார். இந்திய அணி தரப்பில் பும்ரா, அஷ்வின் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 337 ரன்னில் சுருண்டது. ரிஷப் பண்ட் 91 ரன்களும், வாஷிங்டன் சுந்தர் ஆட்டமிழக்காமல் 85 ரன்களும், புஜாரா 73 ரன்களும் அடித்தனர். இங்கிலாந்து அணி தரப்பில் டாம் பெஸ் 4 விக்கெட்டும் ஆண்டர்சன், ஆர்சர், ஜேக் லீச் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
241 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2-வது இன்னிங்சை தொடங்கியது. இந்தியாவின் அஷ்வின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அடுத்தடுத்து விக்கெட்டுக்களை இழந்தது. 2-வது இன்னிங்சில் முதல் பந்திலேயே ரோரி பேர்ன்ஸை வீழ்த்தி அசத்தினார்.
ஜோ ரூட் அதிகபட்சமாக 40 ரன்கள் அடித்தார். ஒல்லி போப் 28 ரன்களும், ஜோஸ் பட்லர் 24 ரன்களும், டாம் பெஸ் 25 ரன்களும் சேர்க்க இங்கிலாந்து 2-வது இன்னிங்சில் 178 ரன்னில் ஆல்அவுட் ஆனது. அஷ்வின் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட் வீழ்த்தினார். முதல் இன்னிங்சில் 241 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்ததால் ஓட்டுமொத்தமாக 419 ரன்கள் அதிகம் பெற்றிருந்தது. இதனால் இந்தியாவின் வெற்றிக்கு 420 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.