3 முறை சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது தொடக்க லீக் ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்சை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சரியான பதிலடி கொடுத்தது.
அந்த ஆட்டத்தில் சென்னை அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் முரளி விஜய், ஷேன் வாட்சன் ஆகியோர் மட்டுமே ஏமாற்றம் அளித்தனர். அம்பத்தி ராயுடு, பாப் டு பிளிஸ்சிஸ் அரை சதம் கண்டனர்.
பந்து வீச்சில் நிகிடி, தீபக் சாஹர், ரவீந்திர ஜடேஜா, பியுஷ் சாவ்லா, சாம் கர்ரன் ஆகியோர் விக்கெட்டை கைப்பற்றினார்கள்.
கடந்த ஆட்டத்தில் காயம் காரணமாக விளையாடாத வெய்ன் பிராவோ இன்றைய ஆட்டத்திலும் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் ஆட்டத்தில் பெற்ற வெற்றி நம்பிக்கையுடன் சென்னை அணி களம் காணும்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான ஸ்டீவன் சுமித் சமீபத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டி தொடருக்கு
முன்பு பயிற்சியில் ஈடுபட்ட போது பந்து தலையில் தாக்கியதால் அந்த தொடரில் விளையாடவில்லை.
அதன் தாக்கம் காரணமாக இன்றைய ஆட்டத்தில் அவர் ஆடுவாரா? என்பது சந்தேகத்துக்குரியதாகவே இருந்தது.
ஆனால் ஸ்டீவன் சுமித் முழு உடல் தகுதியை எட்டி விட்டதால் ஐ.பி.எல். போட்டியில் தொடக்கம் முதலே விளையாடுவார் என்று
ராஜஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்ட்ரூ மெக்டொனால்டு நேற்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
அதேநேரத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை அருகில் இருந்து கவனித்து வருவதால் தலைசிறந்த ஆல்-ரவுண்டரான
பென் ஸ்டோக்ஸ் முதல் கட்ட ஆட்டங்களில் விளையாடாதது அந்த அணிக்கு பெரும் இழப்பாகும்.
குடும்பத்தினருடன் வருகை தந்து இருப்பதால் 6 நாட்கள் தனிமைப்படுத்துதலை மேற்கொண்டு இருக்கும் ஜோஸ் பட்லர் இன்றைய ஆட்டத்தில் விளையாட முடியாது.
வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர் உள்ளிட்ட சிறந்த பவுலர்கள் அந்த அணியில் உள்ளனர்.
சுழற்பந்து வீச்சுக்கு அனுகூலமான அமீரக ஆடுகளத்தில் சென்னை அணியின் சவாலை சமாளிப்பது ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு சற்று கடினமாகவே இருக்கும்.
இருப்பினும் இரு அணியிலும் சிறந்த வீரர்கள் அங்கம் வகிப்பதால் இந்த போட்டியில் விறுவிறுப்புக்கு குறைவு இருக்காது.