CRICKETIPL TAMILLATEST UPDATESNEWS

சென்னை அணியின் சரிவுக்கு காரணம் என்ன?

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பங்கேற்ற எல்லா சீசனிலும் அடுத்த சுற்றுக்குள் (பிளே-ஆப்) கால்பதித்த ஒரே அணி என்ற சென்னை சூப்பர் கிங்சின் பெருமை நேற்றோடு தகர்ந்து விட்டது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி இதுவரை 11 ஆட்டங்களில் ஆடி 8-ல் தோற்று இருக்கிறது. ஒரு சீசனில் சென்னை அணியின் மோசமான செயல்பாடு இது தான். இதற்கு முன்பு அதிகபட்சமாக 7 ஆட்டங்களில் (2010-ம் ஆண்டு) தோற்று இருந்தது.

3 முறை சாம்பியன், 5 முறை 2-வது இடம் என்று ஐ.பி.எல். கிரிக்கெட்டில் சாதனை அணியாக வலம் வந்த சென்னை சூப்பர் கிங்சின் வீழ்ச்சிக்கு சில முக்கிய காரணங்களை நிபுணர்கள் முன்வைக்கிறார்கள்.

* ஐ.பி.எல். தொடங்குவதற்கு முன்பாக நட்சத்திர பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா, சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் இருவரும் கொரோனா அச்சத்தால் விலகினர். சென்னை அணியின் பேட்டிங் முதுகெலும்பாக அறியப்படும் ரெய்னாவின் (193 ஆட்டத்தில் 5,368 ரன் குவித்தவர்) விலகல் பேரிடியாக விழுந்தது. ஏனோ, அணி நிர்வாகம் அவர்களுக்கு பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்யவில்லை. இருக்கிற வீரர்களை வைத்து சமாளித்துக் கொள்ளலாம் என்ற ‘கணக்கு’ பொய்த்து போனது.

* கேப்டன் டோனியின் சில முடிவுகளும் எதிர்மறை விளைவை தந்தன. ‘ஆட்டத்தை வெற்றிகரமாக முடிப்பவர்’ என்று வர்ணிக்கப்படும் டோனி தொடக்க ஆட்டங்களில் 7-வது வரிசையில் இறங்கியது சலசலப்பை ஏற்படுத்தியது. மிகவும் பின்வரிசையில் ஆடும் போது, தன்னை நிலை நிறுத்திக்கொள்ளவே சற்று நேரம் பிடிக்கும். அதற்குள் நெருக்கடி உருவாகி, ஆட்டம் தோல்வியில் முடிந்து விடும். பிறகு எதிர்ப்பு கிளம்பவே தனது பேட்டிங் வரிசையை மாற்றிக்கொண்டார்.

* இளம் வீரர்களை ஓரங்கட்டி விட்டு தொடர்ந்து சொதப்பிய கேதர் ஜாதவுக்கு (8 ஆட்டத்தில் 62 ரன்) மீண்டும் மீண்டும் வாய்ப்பு வழங்கியது விமர்சனத்திற்கு உள்ளானது. ஜாதவ் தேவையான நேரத்தில் மட்டையை சுழட்டாமல் மந்தமாக ஆடி வெறுப்பேற்றியதுடன் சில ஆட்டங்களில் தோல்விக்கு காரணமாக ரசிகர்களால் வறுத்தெடுக்கப்பட்டார்.

* நீண்ட இடைவெளிக்கு பிறகு (14 மாதங்களுக்கு பிறகு) களம் கண்ட டோனியின் பேட்டிங் எடுபடவில்லை. 39 வயதான அவரது ஆட்டத்திறன் வெகுவாக குறைந்து விட்டதை கண் கூடாக பார்க்க முடிந்தது. வழக்கமாக டோனி களத்தில் நின்றால் எதிரணி ‘கிலி’ அடையும். இன்றோ நிலைமை தலைகீழ். 11 ஆட்டங்களில் 180 ரன்களே எடுத்திருக்கிறார். ஒரு அரைசதம் கூட அடிக்கவில்லை. மற்ற வீரர்களின் பேட்டிங்கும் ஒருங்கிணைந்து அமையவில்லை.

* இந்தியாவில் ஐ.பி.எல். கிரிக்கெட் நடக்கும் போது வெளியூரில் தோற்றாலும் சென்னை சேப்பாக்கம் மைதானம் தங்களது கோட்டை என்பதை எப்போதும் சென்னை அணியினர் நிரூபித்து இருக்கிறார்கள். இங்கு பெறும் வெற்றிகள் தான் சென்னை அணியின் முன்னேற்றத்துக்கு ஆணிவேராக அமையும். இந்த முறை ஐ.பி.எல். அமீரகத்துக்கு மாற்றப்பட்டதால் அங்குள்ள சீதோஷ்ண நிலைக்கு தக்கபடி மூத்த வீரர்களால் திறம்பட செயல்பட முடியவில்லை. 18 வீரர்களை பயன்படுத்தி பார்த்தும் இதுவரை அணி ‘செட்’ ஆகவில்லை. சென்னை சூப்பர் கிங்ஸ் எனும் கப்பலில் நிறைய ஓட்டைகள் உள்ளன. ஒரு ஓட்டையை அடைத்தால் இன்னொரு ஓட்டை விழுந்து விடுகிறது என்று முன்பு எப்போதும் இல்லாத வகையில் டோனியின் புலம்பலே அணி பலவீனத்துக்கு சான்று.

* சென்னை அணி வீரர்களின் சராசரி வயது 30.5. இந்த ஐ.பி.எல்.-ல் அதிக வயது கொண்ட வீரர்களை கொண்ட அணி சென்னை தான். இந்த தடவை அனுபவம் கைகொடுக்காததால் வயதான அணி என்ற பிம்பத்தை உடைக்க அடுத்த ஆண்டு அணி நிர்வாகம் இளம் ரத்தத்தை பாய்ச்ச அதிரடி முடிவு எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker