தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்சை வீழ்த்திய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்த 3 ஆட்டங்களில் வரிசையாக தோற்றதால் நெருக்கடிக்குள்ளானது.
‘இது மூத்த வீரர்களை கொண்ட அணி; இந்த சீசனில் தேறாது’ என்றெல்லாம் சமூக வலைதளத்தில் தாறுமாறாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் தடாலடியாக எழுச்சி பெற்ற சென்னை அணி இரு தினங்களுக்கு முன்பு பஞ்சாப் அணியை துவம்சம் செய்தது.
அந்த அணி நிர்ணயித்த 179 ரன்கள் இலக்கை ஷேன் வாட்சன், பாப் டு பிளிஸ்சிஸ் இருவரும் அரைசதம் விளாசி விக்கெட் இழப்பின்றி எட்ட வைத்து சாதனை படைத்தனர்.
இதனால் சென்னை அணியின் நம்பிக்கையும், உத்வேகமும் இப்போது அதிகரித்துள்ளது. கொல்கத்தாவுக்கு எதிரான இன்றைய ஆட்டத்திலும் வாட்சன்- பிளிஸ்சிஸ் ஜோடியின் அதிரடி தொடருமா? என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.
இதுவரை 3 அரைசதத்துடன் 282 ரன்கள் குவித்துள்ள பிளிஸ்சிஸ் இன்றைய ஆட்டத்தில் 23 ரன்கள் எடுத்தால் ஆரஞ்சு நிற தொப்பியை வசப்படுத்தலாம்.
கொல்கத்தா அணி முந்தைய டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் 229 ரன்கள் இலக்கை நோக்கி விளையாடி நெருங்கி வந்து 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. கொல்கத்தா அணியின் தொடக்க வீரர் சுனில் நரின் (4 ஆட்டத்தில் 27 ரன்) தொடர்ந்து சொதப்புகிறார். இதனால் அவரை மாற்ற வேண்டும், மோர்கன், ரஸ்செல்லுக்கு பிறகே கேப்டன் தினேஷ் கார்த்திக் இறங்க வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் சிலர் யோசனை தெரிவித்துள்ளனர். இதனால் கொல்கத்தா அணியில் மாற்றங்கள் இருக்க வாய்ப்பு உண்டு. சுப்மான் கில், மோர்கன், நிதிஷ் ராணா, ரஸ்செல் என்று அந்த அணியில் அதிரடி சூரர்களுக்கு பஞ்சமில்லை. ஆனால் இவர்களின் ஒருங்கிணைந்த ஆட்டம் தான் இன்னும் முழுமையாக வெளிப்படவில்லை. இதே போல் கேப்டன் தினேஷ் கார்த்திக் (4 ஆட்டத்தில் 37 ரன்) பார்மில் இல்லாததும் பின்னடைவாக கருதப்படுகிறது. மற்றபடி பந்து வீச்சில் கொல்கத்தா அணி ஓரளவு நன்றாகவே இருக்கிறது.
3-வது வெற்றிக்காக கோதாவில் குதிக்கும் இவ்விரு அணிகளும் சவால் மிக்கவை என்பதால் போட்டி பரபரப்பாக இருக்கும் என்று நம்பலாம்.