TAMIL
சென்னையின் எப்.சி. அணியின் புதிய பயிற்சியாளராக ஓவன் கோய்லி நியமனம்
இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி தொடருக்கான சென்னையின் எப்.சி. அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஜான் கிரிகோரி (இங்கிலாந்து) சமீபத்தில் அந்த பதவியில் இருந்து திடீரென விலகினார். 2017-ம் ஆண்டில் ஜான் கிரிகோரி வழிகாட்டுதலில் கோப்பையை வென்ற சென்னையின் எப்.சி. அணி கடந்த ஆண்டில் கடைசி இடத்துக்கு தள்ளப்பட்டது. அத்துடன் இந்த சீசனில் சென்னை அணியின் தொடக்கம் சரியாக அமையவில்லை. 6 ஆட்டங்களில் ஆடி இருக்கும் சென்னை அணி ஒரு வெற்றி, 2 டிரா, 3 தோல்வி கண்டு கடைசி இடத்துக்கு முந்தைய நிலையில் இருக்கிறது. தொடக்க சரிவை அடுத்து என்னால் சென்னை அணியை எழுச்சி பெற வைக்க முடியவில்லை. எனவே தான் ஒதுங்க விரும்புகிறேன் என்று ஜான் கிரிகோரி தெரிவித்தார். இதைத்தொடர்ந்து அணி நிர்வாகத்துக்கும், அவருக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சுமூக முடிவு ஏற்பட்டு அவர் விலகினார்.
இந்த நிலையில் சென்னை அணியின் புதிய தலைமை பயிற்சியாளராக ஸ்காட்லாந்து முன்னாள் வீரரான ஓவன் கோய்லி நியமிக்கப்பட்டுள்ளார். அவர் இந்த சீசன் முடியும் வரை ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். 53 வயதான ஓவன் கோய்லி இங்கிலாந்து பிரிமியர் லீக் அணிகளின் பயிற்சியாளராக இருந்த அனுபவம் கொண்டவர் ஆவார். வருகிற 9-ந் தேதி நடைபெறும் ஜாம்ஷெட்பூர் எப்.சி. அணிக்கு எதிரான ஆட்டத்தில் இருந்து ஓவன் கோய்லி தனது பயிற்சியாளர் பணியை தொடங்குகிறார்.