CRICKETLATEST UPDATESNEWSTAMIL
சூர்யகுமார் யாதவின் ஆட்டத்தை பார்த்து பிரமித்தோம்- விராட் கோலி பாராட்டு
அகமதாபாத்தில் நேற்று நடந்த நான்காவது 20 ஓவர் போட்டியில் இங்கிலாந்தை தோற்கடித்து இந்தியா த்ரில் வெற்றி பெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 185 ரன் எடுத்தது.
சூர்யகுமார் யாதவ் 31 பந்தில் 57 ரன் எடுத்தார். இதில் 6 பவுண்டரி, 3 சிக்சர் அடங்கும். இது அவருக்கு 2-வது போட்டி ஆகும். அறிமுக போட்டியில் சூர்ய குமார் யாதவ் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.
நேற்றைய ஆட்டத்தில் 3-வது வீரராக களம் இறக்கப்பட்ட அவர் சிறப்பாக விளையாடி முத்திரை பதித்தார். சர்வதேச கிரிக்கெட்டில் தனது முதல் பந்திலேயே சிக்சர் அடித்து அசத்தினார்.
பின்னர் இலக்கை நோக்கி விளையாடிய இங்கிலாந்து அணிக்கு சீரான இடைவெளியில் விக்கெட் சரிந்தது. கடைசி ஓவரில் இங்கிலாந்து வெற்றிக்கு 23 ரன் தேவைப்பட்டது. ஷர்துல் தாகூர் வீசிய அந்த ஓவரில் 14 ரன் எடுக்கப்பட்டது. ஒரு விக்கெட்டும் வீழ்ந்தது.
இங்கிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 177 ரன் எடுத்தது. ஆனால் இந்தியா 8 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்தியா தரப்பில் ஷர்துல் தாகூர் 3 விக்கெட்டும், ஹர்திக் பாண்ட்யா, ராகுல் சாகர் தலா 2 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
வெற்றி குறித்து கேப்டன் வீராட்கோலி கூறியதாவது:-
ஒரு சிறந்த அணிக்கு எதிராக கடினமான ஆட்டமாக இருந்தது. பனிப்பொழிவு மிகப்பெரிய அளவில் இருந்தது. 180 ரன்னுக்கு மேல் எடுக்க வேண்டும் என்று எதிர்பார்த்தோம்.
சூர்யகுமார் பற்றி குறிப்பாக சொல்ல வேண்டும். 3-வது வீரராக களம் வந்து விளையாடுவது எளிதானதல்ல. அதேபோல் முதல் பந்திலேயே சிக்சர் அடித்து தொடங்கியதை கண்டு நாங்கள் திகைத்து போனோம். அவர் தனது அதிகாரத்தை முத்திரையாக குத்தினார்.
இந்த இளம் வீரர்கள் அணிக்குள் வந்து தங்களது வாய்ப்புகளை பற்றிக் கொள்கிறார்கள். நீங்கள் உங்களின் தரத்தை உயர்வாக அமைத்து உள்ளீர்கள். ஹர்த்திக் பாண்ட்யா பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.