IPL TAMILTAMIL

சூப்பர் ஓவரில் இஷான் கிஷனை களம் இறக்காதது ஏன்? மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா விளக்கம்

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்று முன்தினம் இரவு நடந்த மும்பை இந்தியன்சுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த பெங்களூரு

ராயல் சேலஞ்சர்ஸ் அணி ஆரோன் பிஞ்ச், தேவ்தத் படிக்கல், டிவில்லியர்ஸ் ஆகியோரது அரைசதத்தின் உதவியுடன் 3 விக்கெட் இழப்புக்கு 201 ரன்கள் குவித்தது.

தொடர்ந்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் 78 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறினாலும், இஷான் கிஷன் (2 பவுண்டரி, 9 சிக்சருடன் 99 ரன்)- பொல்லார்ட் (60 ரன்) ஜோடி அதிரடி காட்டி அணியை வெற்றிக்கு அருகில் அழைத்து சென்றது. கடைசி ஓவரில் இஷான் கிஷன் ஆட்டம் இழந்தது அந்த அணியின் வெற்றி வாய்ப்புக்கு வேட்டு வைத்தது.

மும்பை அணி 5 விக்கெட்டுக்கு 201 ரன்கள் எடுத்ததால் போட்டி ‘டை’யில் (சமன்) முடிந்தது. ஐ.பி.எல். வரலாற்றில் 200-க்கும் மேலான ஸ்கோரில் ஒரு ஆட்டம் ‘டை’ ஆனது இதுவே முதல் முறையாகும்.

இதன் பின்னர் கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரில் நவ்தீப் சைனி பந்து வீச்சில் மும்பை அணி ஒரு விக்கெட்டுக்கு 7 ரன்னே எடுத்தது.

பின்னர் ஆடிய பெங்களூரு அணி பும்ரா பந்து வீச்சை எதிர்கொண்டு விக்கெட் இழப்பின்றி 11 ரன்கள் எடுத்து ‘திரில்’ வெற்றியை ருசித்தது.

வெற்றிக்கு பிறகு பெங்களூரு கேப்டன் விராட்கோலி கூறுகையில், ‘இந்த ஆட்டத்தில் கணிக்க முடியாத அளவுக்கு வெற்றி வாய்ப்பு இரு அணிக்கும் மாறி, மாறி வந்தது. பேட்டிங்கில் நன்றாக செயல்பட்டு 200 ரன்களை கடந்தோம்.

இதே போல் எங்களது தொடக்க பந்து வீச்சும் அருமையாகவே இருந்தது. மிடில் ஓவர்களில் மும்பை அணி பொறுமையுடன் செயல்பட்டு, பனிப்பொழிவு வரட்டும் என்று காத்திருந்து அதிரடியாக ஆடினார்கள்.

பீல்டிங்கில் தான் எங்களுக்கு பிரச்சினை இருக்கிறது.

அதில் நாங்கள் கவனம் செலுத்த வேண்டும். நாங்கள் கேட்ச் வாய்ப்பை (3 கேட்ச்சை நழுவ விட்டனர்) விடாமல் இருந்திருந்தால் ஆட்டம் சூப்பர் ஓவர் வரை சென்று இருக்காது’ என்றார்.

சூப்பர் ஓவரில் ஹர்திக் பாண்ட்யாவுக்கு பதிலாக 99 ரன் விளாசிய இஷான் கிஷனை களம் இறக்கி இருக்கலாமே? என்று எழுந்த விமர்சனத்துக்கு பதில் அளித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா கூறுகையில், ‘இது ஒரு சிறப்பு வாய்ந்த ஆட்டம்.

பேட்டிங்கில் நாங்கள் கண்ட தொடக்கத்தை பார்க்கையில் எங்களுக்கு வாய்ப்பே இல்லாதது போல் இருந்தது. இஷான் கிஷனின் இன்னிங்ஸ் எங்களை சரிவில் இருந்து மீள வைத்தது.

பொல்லார்ட் வழக்கம் போல தனது அருமையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

நாங்கள் நெருக்கடி அளித்தாலும் அவர்கள் தீர்க்கமாக செயல்பட்டனர். தனது இன்னிங்சை முடித்த இஷான் கிஷன் களைப்பாக இருந்தார்.

சூப்பர் ஓவரில் இறங்கும் அளவுக்கு அவர் சவுகரியமாக உணரவில்லை. இதனால் பந்தை நீண்ட தூரம் அடிக்கக்கூடிய ஹர்திக் பாண்ட்யாவை இறக்கினோம்.

ஆனால் அவரது ஆட்டம் சரியாக அமையவில்லை.

7 ரன்னுக்குள் எதிரணியை கட்டுப்படுத்த வேண்டும் என்றால் அதிர்ஷ்டமும் நம் பக்கம் இருக்க வேண்டும்’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker