TAMIL

சூப்பர் ஓவரில் இந்தியா மீண்டும் வெற்றி: நியூசிலாந்தின் சோகம் தொடருகிறது

இந்தியா – நியூசிலாந்து அணிகள் இடையிலான 4-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வெலிங்டனில் நேற்று நடந்தது.

ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டதால் இந்திய அணியில் ரோகித் சர்மா, ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி ஆகியோருக்கு ஓய்வு
அளிக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், நவ்தீப் சைனி சேர்க்கப்பட்டனர்.

நியூசிலாந்து அணியில் இரண்டு மாற்றங்கள் செய்யப்பட்டன.


கேப்டன் வில்லியம்சன் தோள்பட்டை வலியால் அவதிப்பட்டதால் அவர் வெளியே உட்கார வைக்கப்பட்டு, டாம் புருஸ் அழைக்கப்பட்டார்.

காலின் டி கிரான்ட்ஹோமுக்கு பதிலாக டேரில் மிட்செல் இடம் பிடித்தார்.

நியூசிலாந்து அணியை டிம் சவுதி வழிநடத்தினார்.

தொடர்ந்து 4-வது முறையாக ‘டாஸ்’ ஜெயித்த நியூசிலாந்து, முதலில் இந்தியாவை பேட் செய்ய பணித்தது.

இதன்படி லோகேஷ் ராகுலும், சஞ்சு சாம்சனும் இந்தியாவின் இன்னிங்சை தொடங்கினர்.

தொடக்கம் மகிழ்ச்சிகரமாக அமையவில்லை. குஜ்ஜெலின் பந்து வீச்சில் சிக்சர் அடித்த சாம்சன் (8 ரன்) அதே ஓவரில் மீண்டும்
தூக்கியடித்த போது சரியாக ‘கிளிக்’ ஆகாத பந்து தலைக்கு மேலாக எழும்பி கேட்ச்சாக மாறியது.

இதையடுத்து 2-வது விக்கெட்டுக்கு கேப்டன் விராட் கோலி வந்தார்.

அதிரடியில் மிரட்டிய லோகேஷ் ராகுல் அடுத்தடுத்த ஓவர்களில் பந்தை சிக்சருக்கு ஓடவிட்டார்.

அதே நேரத்தில், பென்னட்டுவின் பந்து வீச்சில் தொடர்ந்து 2 பவுண்டரி விளாசி நம்பிக்கையுடன் தொடங்கிய கோலி, சற்று எழும்பி வந்த
பந்தை தட்டி விட்ட போது சான்ட்னெர் பாய்ந்து விழுந்து சூப்பராக கேட்ச் செய்தார்.


இதனால் கோலி 11 ரன்னோடு ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.

மிடில் ஓவர்களில் சுழற்பந்து வீச்சு மூலம் நியூசிலாந்து வெகுவாக நெருக்கடி கொடுத்தது.

ஸ்ரேயாஸ் அய்யர் (1 ரன்), ஷிவம் துபே (12 ரன்) சோதியின் சுழலில் சிக்கினர்.

இதற்கிடையே லோகேஷ் ராகுலும் (39 ரன், 26 பந்து, 3 பவுண்டரி, 2 சிக்சர்) சோதி ஷாட்பிட்ச்சாக போட்ட பந்தை வளைத்து லெக்சைடில் விரட்டிய போது எல்லைக்கோடு அருகே பிடிபட்டார்.

வாஷிங்டன் சுந்தர் (0) தாக்குப்பிடிக்கவில்லை.

இதனால் 88 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை (11.3 ஓவர்) பறிகொடுத்து இந்திய அணி பரிதவித்தது.

இந்த சிக்கலான சூழலில் மனிஷ் பாண்டே அணியை காப்பாற்றினார்.

அவசரம் கட்டாமல் ஒன்றிரண்டு ரன்கள் வீதம் துரிதமாக சேகரித்த மனிஷ் பாண்டேவுக்கு, கடைசி கட்டத்தில் ஷர்துல் தாகூர் (20 ரன்), நவ்தீப் சைனி (11 ரன்) ஆகியோர் ஓரளவு ஒத்துழைப்பு தந்தனர்.

மனிஷ் பாண்டே (50 ரன், 36 பந்து, 3 பவுண்டரி) அரைசதத்தை நிறைவு செய்ய, இந்திய அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுக்கு 165 ரன்கள் சேர்த்து சவாலான நிலையை எட்டிப்பிடித்தது.


கடைசி 5 ஓவர்களில் மட்டும் நமது பேட்ஸ்மேன்கள் 53 ரன்கள் திரட்டியது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

பின்னர் 166 ரன்கள் இலக்கை நோக்கி நியூசிலாந்து பேட்டிங் செய்தது. மார்ட்டின் கப்தில் 4 ரன்னில் வெளியேறினார்.

அதைத் தொடர்ந்து காலின் முன்ரோவும், விக்கெட் கீப்பர் டிம் செய்பெர்ட்டும் கைகோர்த்து தங்கள் அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இவர்கள் ஆடிய விதத்தை பார்த்த போது நியூசிலாந்து அணி சிக்கலின்றி இலக்கை எட்டிவிடும் என்றே நினைக்கத் தோன்றியது.

நேர்த்தியாக ஆடிய இந்த ஜோடி ரன்-அவுட்டில் பிரிந்தது.

அணியின் ஸ்கோர் 96 ரன்களாக (11.4 ஓவர்) உயர்ந்த போது முன்ரோ 64 ரன்களில் (47 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்-அவுட் செய்யப்பட்டார்.

அதுவும் எல்லைக்கோடு அருகில் இருந்து பந்தை பீல்டிங் செய்த ஷர்துல் தாகூர், ‘கவர்’ திசையில் நின்ற கோலியிடம் வீச, அவர்
அதை பிடித்து ஸ்டம்பை துல்லியமாக தாக்கி பிரமிக்க வைத்தார்.

அடுத்து வந்த டாம் புருஸ் (0) போல்டு ஆனார்.

இதன் பின்னர் செய்பெர்ட், ராஸ் டெய்லருடன் ஜோடி சேர்ந்தார்.

இரண்டு கேட்ச் மற்றும் 2 முறை ரன்-அவுட் கண்டத்தில் இருந்து தப்பிபிழைத்த இவர்கள் இலக்கை மிகவும் நெருங்கினர்.


கடைசி 2 ஓவர்களில் 11 ரன்கள் மட்டுமே அந்த அணிக்கு தேவைப்பட்டது.

இதில் 19-வது ஓவரை வீசிய நவ்தீப் சைனி 4 ரன் வழங்கி சிக்கனத்தை காட்டினார்.

இதையடுத்து இறுதி ஓவரில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 7 ரன் தேவையாக இருந்தது.

நியூசிலாந்தின் கைவசம் 7 விக்கெட் இருந்தது. பரபரப்பான 20-வது ஓவரை வேகப்பந்து வீச்சாளர் ஷர்துல் தாகூர் வீசினார்.

முதல் பந்தை சிக்சருக்கு தூக்க முயற்சித்து டெய்லர் (24 ரன்) கேட்ச் ஆனார்.

அடுத்த பந்தை எதிர்கொண்ட டேரில் மிட்செல் பவுண்டரி விரட்டினார்.

3-வது பந்தில் செய்பெர்ட் (57 ரன், 39 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) ரன்-அவுட் ஆனார்.

4-வது பந்தில் சான்ட்னெர் ஒரு ரன் எடுக்க, 5-வது பந்தில் டேரில் மிட்செல் (4 ரன்) ஆட்டம் இழந்தார்.

இதனால் கடைசி பந்தில் நியூசிலாந்தின் வெற்றிக்கு 2 ரன் தேவைப்பட்டது.

களத்தில் உச்சக்கட்ட டென்ஷன் நிலவியது.


முடிவு என்னவாகுமோ? என்ற பதபதப்பில் ரசிகர்கள் சீட்டின் நுனிக்கே வந்து விட்டனர்.

கோலியின் ஆலோசனைக்கு பிறகு கடைசி பந்தை ஷர்துல் தாகூர் வைடாக வீசினார்.

அதை அடித்த சான்ட்னெர் ஒரு ரன் எடுத்து விட்டு, 2-வது ரன்னுக்கு ஓடிய போது சுலபமாக ரன்-அவுட் செய்யப்பட்டார்.

இதனால் நியூசிலாந்தின் ஸ்கோரும் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 165 ரன்களில் நின்றதால் இந்த ஆட்டம் சமன் (டை) ஆனது.

ஏற்கனவே 3-வது ஆட்டமும் இதே போன்று சமன் ஆகி, சூப்பர் ஓவருக்கு சென்றது நினைவு கூரத்தக்கது.

வெற்றி-தோல்வியை நிர்ணயிக்க கடைபிடிக்கப்பட்ட சூப்பர் ஓவரில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 2 பவுண்டரி உள்பட ஒரு விக்கெட்டுக்கு 13 ரன் எடுத்தது.

இந்த ஓவரை ஜஸ்பிரித் பும்ரா வீசினார்.

ஸ்ரேயாஸ் அய்யர், விக்கெட் கீப்பர் லோகேஷ் ராகுல் தலா ஒரு கேட்ச் வாய்ப்பை வீணடித்தனர்.

இல்லாவிட்டால் நியூசிலாந்தின் ஸ்கோர் இதை விட குறைந்திருக்கும்.

பின்னர் 14 ரன்கள் இலக்கை நோக்கி இந்திய அணி சூப்பர் ஓவரில் ஆடியது.

கேப்டன் விராட் கோலியும், லோகேஷ் ராகுலும் களம் இறங்கினர்.

நியூசிலாந்து தரப்பில் பொறுப்பு கேப்டன் டிம் சவுதி பந்து வீசினார்.

முதல் பந்தை அட்டகாசமாக சிக்சருக்கு தெறிக்கவிட்ட ராகுல், 2-வது பந்தை பவுண்டரி விளாசி குதூகலப்படுத்தினார்.

3-வது பந்தையும் பவுண்டரிக்கு விரட்டி முடித்து விடலாம் என்று கணக்கு போட்ட ராகுல் (10 ரன்) கேட்ச் ஆகிப்போனார்.


அடுத்து சஞ்சு சாம்சன் வந்தார்.

பீல்டர்கள் எல்லைக்கோடு பக்கம் நிறுத்தப்பட்ட நிலையில், 4-வது பந்தை எதிர்கொண்ட விராட் கோலி பக்கத்திலேயே அடித்து விட்டு சாதுர்யமாக 2 ரன் ஓடி எடுத்து, எதிரணியை திகைக்க வைத்தார்.

இதைத் தொடர்ந்து 5-வது பந்தை பவுண்டரிக்கு சாத்திய கோலி ஆட்டத்தை தித்திப்பாக முடித்து வைத் தார்.

முந்தைய ஆட்டத்தை போன்றே இந்த ஆட்டத்திலும் சூப்பர் ஓவரில் இந்தியா பெற்ற திரில் வெற்றியை ரசிகர்கள் ஆர்ப்பரிப்புடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட இந்த 20 ஓவர் தொடரில் இந்தியா 4-0 என்ற கணக்கில் கம்பீரமாக முன்னிலை வகிக்கிறது.

முதல் 3 ஆட்டங்களிலும் இந்தியா ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தது.

ஆல்-ரவுண்டராக ஜொலித்த ஷர்துல் தாகூர் ஆட்டநாயகன் விருதை பெற்றார்.

இவ்விரு அணிகள் இடையிலான 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி மவுன்ட் மாங்கானுவில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

‘கற்றுத் தந்த பாடம்’ -இந்திய கேப்டன் கோலி

“எதிரணி சிறப்பாக விளையாடி வெற்றியை நெருங்கினாலும் கூட, ஆட்டத்தை நமது பக்கம் கொண்டு வரும் வாய்ப்புக்காக கடைசி பந்து வரை பொறுமை காக்க வேண்டும்.

இது தான் கடந்த இரு ஆட்டங்களிலும் நான் புதிதாக கற்றுக் கொண்ட பாடம்.

நியூசிலாந்து பயணத்துக்கு முன்பாக நாங்கள் சூப்பர் ஓவரில் விளையாடியதில்லை.

இப்போது இரண்டு சூப்பர் ஓவரிலும் வெற்றி பெற்றிருக்கிறோம்.

இது அணியின் குணாதிசயத்தை வெளிப்படுத்துகிறது.

சூப்பர் ஓவரில் ராகுலையும், சஞ்சு சாம்சனையும் தான் இறக்குவதாக இருந்தோம்.


ஆனால் ராகுல் என்னிடம் நான் (கோலி) இறங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

எனது அனுபவமும், விளையாடும் விதமும் உதவும் என்று கூறினார்.

இதன் பிறகே நானும், ராகுலும் களம் கண்டோம்”

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker