TAMIL

சூதாட்ட புகார்: டி.என்.பி.எல். கிரிக்கெட் நிர்வாக கவுன்சில் சேர்மன் விளக்கம்

தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் 8 அணிகள் பங்கேற்கும் தமிழ்நாடு பிரிமீயர் லீக் (டி.என்.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் 2016-ம் ஆண்டு முதல் நடந்து வருகிறது. 4-வது டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டி கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்டு மாதம் நடந்தது.



இந்த போட்டி தொடரின் போது அடையாளம் தெரியாத நபர் செல்போனில் தகவல் அனுப்பி சூதாட்ட முயற்சியில் ஈடுபட்டதாக இந்திய கிரிக்கெட் வாரிய ஊழல் தடுப்பு அதிகாரிகளிடம் வீரர்கள் புகார் தெரிவித்துள்ளனர். அத்துடன் ஒரு அணியின் பயிற்சியாளரின் நடத்தையில் சந்தேகம் இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

இந்த சர்ச்சை குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய ஊழல் தடுப்பு பிரிவின் தலைவர் அஜித்சிங்கிடம் நேற்று கேட்ட போது, ‘சில வீரர்களிடம் செல்போன் மூலம் சூதாட்டத்துக்கு தேவைப்படும் விவரங்களை மர்மநபர் குறுஞ்செய்தி அனுப்பி கேட்டதாக வீரர்கள் தெரிவித்த புகார் குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். இது வீரர்களுக்கு எதிரான விசாரணை கிடையாது. சூதாட்டத்துக்கு அணுகிய நபர் யார்? என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு இருக்கிறோம். முதலில் பேட்டிங் செய்யப்போவது யார்? என்பது உள்பட போட்டி தொடர்பான விவரங்களை வீரர்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி கேட்டு இருக்கிறார். அவர் பெட்டிங்கில் ஆர்வம் உள்ளவராக கூட இருக்கலாம். அணியின் உரிமையாளர்களுக்கு எதிராக எந்த புகாரும் வரவில்லை. வீரர்களுக்கு நாங்கள் ஏற்கனவே ஊழல் தடுப்பு விவகாரம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறோம். தேவைப்பட்டால் வீரர்கள் எங்களை நேரடியாகவும் தொடர்பு கொள்ளலாம்’ என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் டி.என்.பி.எல். கிரிக்கெட் நிர்வாக கவுன்சில் சேர்மன் பி.எஸ்.ராமன் நேற்று மாலை விடுத்துள்ள செய்திக்குறிப்பில், ‘டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் சூதாட்டத்துக்கு எந்தவித இடமும் அளித்து விடக்கூடாது என்பதில் நாங்கள் மிகவும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு வருகிறோம். இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் தடுப்பு அதிகாரிகள் போட்டி தொடர் முழுவதும் கண்காணிப்பு பணியை செய்து வருகிறார்கள். சூதாட்ட புகார் எழுந்ததும் உடனடியாக விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டு இருக்கிறது. இந்த கமிட்டி முழுமையாக விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும் முன்பு விசாரணை குறித்து தமிழ்நாடு கிரிக்கெட் கமிட்டி கருத்து எதுவும் தெரிவிக்க முடியாது. போட்டியின் நேர்மை மீது மக்கள் வைத்து இருக்கும் நம்பிக்கையை குலைக்கும் வகையில் யார் நடந்து கொண்டாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker