CRICKETIPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
சூதாட்ட தரகர் அணுகிய ஐ.பி.எல். வீரர் யார்?: பெயர் விவரத்தை வெளியிட கிரிக்கெட் வாரியம் மறுப்பு
கடந்த 2013-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வீரர்கள் ஸ்ரீசந்த், அங்கித் சவான், அஜீத் சண்டிலா ஆகியோர் சூதாட்ட புகாரில் சிக்கினார்கள். டெல்லி போலீசாரால் கைது செய்யப்பட்டனர். இதேப்போல கிரிக்கெட் வாரியமும் நடவடிக்கை எடுத்து இருந்தது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் (பி.சி.சி.ஐ.), ஐ.பி.எல். நிர்வாகமும், வீரர்களுக்கு கடும் கட்டுப்பாடுகளை கொண்டு வந்தன. சூதாட்ட தரகர்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று பல்வேறு அறிவுரைகளும் பயிற்சி வகுப்பும் வீரர்களுக்கு அளிக்கப்பட்டன.
இந்த நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்று வரும் 13-வது ஐ.பி.எல். போட்டியில் ஒரு அணியின் வீரரை ஸ்பாட் பிக்சிங் செய்வதற்கான செயல்களில் ஈடுபட சூதாட்ட தரகர் அனுகியதாக தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா தடுப்பு பாதுகாப்பு வளையத்தில் வீரர்கள் இருப்பதால், அவர்களை யாரும் நெருங்க முடியாது. ஆனால் ஆன்-லைன் மூலம் ஐ.பி.எல். வீரர் ஒருவரை சூதாட்ட தரகர் அனுகியுள்ளார்.
இதுகுறித்து அந்த வீரர் அனுப்பிய புகாரின் பேரில் பி.சி.சி.ஐ.யின் ஊழல் தடுப்புப் பிரிவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு விசாரணை நடத்தி வருகிறது. ஆனால் சூதாட்ட தரகர்கள் தொடர்பு கொண்ட வீரர் யார் என்ற விவரம் வெளியிடப்படவில்லை.
இதுகுறித்து பி.சி.சி.ஐ. ஊழல் தடுப்பு பிரிவு தலைவரும், ராஜஸ்தான் போலீஸ் முன்னாள் டி.ஜி.பி.யுமான அஜித்சிங் கூறியதாவது:-
சூதாட்ட தரகர் ஒரு வீரரை அனுகியுள்ளார் என்பது உண்மைதான். நாங்கள் அந்த வீரரை கண்காணித்து வருகிறோம். அவரும் சூதாட்ட தரகருடன் பேசியுள்ளார். அவரை பிடிக்க சிறிது காலமாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அந்த ஐ.பி.எல். வீரர் உள்நாட்டை சேர்ந்தவரா? அல்லது வெளிநாட்டைச் சேர்ந்தவரா? எந்த அணியில் இருப்பவர் அல்லது எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பது குறித்து கேட்டதற்கு எந்த தகவலும் அளிக்க அஜீத்சிங் மறுத்துவிட்டார்.