ஐ.பி.எல் கிரிக்கெட் திருவிழா நேற்றுமுன்தினம் (19) தொடங்கியது. ஏறக்குறைய அனைத்து நாட்டு வீரர்களும் போட்டிக்கு தயாராகிவிட்டனர்.
அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் வருவதற்கு தாமதம் ஏற்பட்டது. அவர்கள் ஏற்கனவே இங்கிலாந்தில் பாதுகாப்பு வளையத்திற்குள் இருந்ததால் 36 மணித்தியாலங்கள் சுய தனிமைப்படுத்தல் இருந்தால் போதுமானது என அறிவிக்கப்பட்டது.
இதனால் நேற்றுமுன்தினம் நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக இங்கிலாந்து வீரர் சாம் கர்ரன் விளையாடினார். இதனிடையே, சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 2ஆவது போட்டியில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியை சார்ஜாவில் எதிர்கொள்கிறது.
இதில் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள இங்கிலாந்து அணியின் அதிரடி வீரர் ஜோஸ் பட்லர், தனது குடும்பத்துடன் ஐக்கிய அரபு இராச்சியம் வந்துள்ளார்.
இதன்படி, கொரோனா தடுப்பு நடைமுறையின்படி தனிமைப்படுத்திக் கொண்டுள்ள அவர், குடும்பத்தாருடன் கட்டாயம் ஆறு நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்பதால் ஜோஸ் பட்லர் முதல் ஆட்டத்தில் விளையாட மாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஜோஸ் பட்லர் கூறுகையில் ”நான் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கான முதல் போட்டியை தவறவிடுகிறேன். ஏனென்றால், சுய தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டியுள்ளது.
நான் இங்கு குடும்பத்துடன் வந்துள்ளேன். எனது குடும்பத்துடன் வருவதற்கு ராஜஸ்தான் ரோயல்ஸ் அனுமதி கொடுத்தது சிறந்த விடயம். இது எனக்கு மிகப்பெரிய உதவியாக இருக்கும்” என்றார்.
இதன்படி, அவருக்கும், குடும்பத்தாருக்கும் மேற்கொள்ளப்பட்ட இரண்டாவது பி.சி.ஆர் பரிசோதனையில் கொவிட் – 19 வைரஸ் தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் ராஜஸ்தான் அணியின் இரண்டாவது லீக் போட்டியில் ஜோஸ் பட்லர் களமிறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, ஜோஸ் பட்லருக்குப் பதிலாக தென்னாபிரிக்கா வீரர் டேவிட் மில்லர் சென்னை அணியுடனான போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ரொபின் உத்தப்பாவுடன், இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக இன்னிங்ஸைத் தொடங்குவார்கள் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இதேவேளை, இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் தொடரின் போது தலையில் பந்து தாக்கியதால் மூளை அதிர்ச்சிக்குள்ளாகிய ராஜஸ்தான் ரோயல்ஸ் அணியின் தவைவர் ஸ்டீவ் ஸ்மித், நாளைய போட்டியில் களமிறங்குவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.