பஞ்சாப்புக்கு எதிராக நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் சுனில் நரின் அபாரமாக பந்து வீசி தங்கள் அணிக்கு 2 ரன் வித்தியாசத்தில் வெற்றியை தேடித்தந்தார்.
இந்த ஆட்டத்தில் அவரது பந்து வீச்சு விதிமுறைக்கு புறம்பாக சந்தேகம் அளிக்கும் வகையில் இருந்ததாக கள நடுவர்கள் உல்ஹாஸ் காந்தி, கிறிஸ் கப்பானி புகார் அளித்துள்ளனர்.
இதனால் சுனில் நரின் எச்சரிக்கை பட்டியலில் வைக்கப்பட்டு உள்ளார்.
ஆனால் அவர் தொடர்ந்து பந்து வீசலாம்.
மறுபடியும் நரின் இதே போன்ற புகாரில் சிக்கினால் அவரது பந்து வீச்சு பரிசோதனைக்குட்படுத்தப்படும் என்று ஐ.பி.எல். நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த விவகாரம் குறித்து கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
சுனில் நரைனின் பந்துவீச்சு குறித்து நடுவர்கள் புகார் அளித்துள்ளது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்கும் சுனில் நரைனுக்கும் வியப்பளிக்கிறது.
2012 முதல் 115-க்கும் அதிகமான ஐபிஎல் ஆட்டங்களில் நரைன் விளையாடியுள்ளார். இதற்கு முன்பு சுனில் நரைனின் பந்து வீச்சு முறை குறித்து சந்தேகம் எழுந்ததாலும், அவரது பந்து வீச்சை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அங்கீகரித்துள்ளது.
அதன்பிறகு 68 ஐபிஎல் ஆட்டங்களில் சுனில் நரைன் விளையாடியுள்ளார்.
இந்த வருடப் போட்டியில் அவர் 6-வது ஆட்டத்தை விளையாடியுள்ளார்.
இதுவரை அவருடைய பந்துவீச்சு முறை குறித்து யாரும் புகார் அளிக்கவில்லை.
எனினும் இதுதொடர்பான ஐபிஎல் நிர்வாகத்தின் நடவடிக்கையை மதிக்கிறோம். ஐபிஎல் நிர்வாகத்துடன் இணைந்து பேசிவருகிறோம். இந்த விவகாரத்தில் உரிய தீர்வு விரைவில் எட்டப்படும் என நம்புகிறோம்” எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.