TAMIL
சிறந்த சாதனை எதுவும் செய்ததில்லை: அப்ரிடி விமர்சனத்துக்கு கம்பீர் பதிலடி
இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான கிரிக்கெட் போட்டி தொடரின் போது களத்தில் அடிக்கடி வாக்குவாதத்தில் ஈடுபடும் அப்ரிடி, கவுதம் கம்பீர் இடையிலான மோதல் ஓய்வுக்கு பிறகும் தொடர்ந்து வருகிறது.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஆல்-ரவுண்டருமான அப்ரிடி தனது சுயசரிதை புத்தகத்தில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் குறித்து குறிப்பிட்டு வம்புக்கு இழுத்து இருக்கிறார். அதில் ‘கவுதம் கம்பீருக்கு குணநலனில் கோளாறு இருக்கிறது.
அவருடைய எண்ணங்கள் சரியில்லை. அவருக்கென்று ஒரு தனித்தன்மை கிடையாது. அவரை போன்ற கிரிக்கெட் வீரர்கள் எப்போதாவது தான் இருப்பார்கள்.
அவர் கிரிக்கெட்டில் சிறந்த சாதனை எதுவும் செய்ததில்லை.
ஆனால் மனதில் டான் பிராட்மேனும், ஜேம்ஸ்பாண்டும் கலந்து செய்யப்பட்ட கலவை போல அவர் தன்னைத் தானே நினைத்து கொள்வார்’ என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கு கவுதம் கம்பீர் தனது டுவிட்டர் மூலம் பதிலடி கொடுத்துள்ளார்.
அந்த பதிவில், ‘தனது வயதையே நினைவு வைத்து கொள்ள முடியாத ஒருவருக்கு, எனது சாதனையை எப்படி நினைவில் வைத்து கொள்ள முடியும்.
சரி பரவாயில்லை, அப்ரிடிக்கு ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன். 2007-ம் ஆண்டு நடந்த 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நான் 54 பந்துகளில் 75 ரன்கள் அடித்தேன்.
அந்த போட்டியில் நீங்கள் (அப்ரிடி) முதல் பந்திலேயே டக்-அவுட்.
மிக முக்கியமாக நாங்கள் கோப்பையை கைப்பற்றினோம்.
ஆம் பொய்யர்கள் மற்றும் சந்தர்ப்பவாதிகளுக்கு எதிராக எனது நடத்தை இப்படி தான் இருக்கும்’ என்று தெரிவித்துள்ளார்.