TAMIL

சாதி ரீதியான விமர்சனம்: யுவராஜ்சிங் வருத்தம் தெரிவித்தார்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்ரவுண்டர் யுவராஜ்சிங், தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மாவுடன் சமீபத்தில் சமூக வலைதளம் மூலம் உரையாடினார்.

அப்போது சுழற்பந்து வீச்சாளர் யுஸ்வேந்திர சாஹல் வெளியிடும் ‘டிக்டாக்‘ வீடியோக்கள் குறித்து யுவராஜ்சிங் கிண்டல் செய்துள்ளார்.

அத்துடன் அந்த உரையாடலின் போது வடமாநிலத்தில் குறிப்பிட்ட இன மக்களை குறிக்கும் வார்த்தையை பயன்படுத்தி யுவராஜ்சிங், சாஹலை விமர்சித்தது சமூக வலைதளங்களில் சர்ச்சையாக மாறியது.

இந்த பேச்சு யுஸ்வேந்திர சாஹல் சார்ந்த சமூகத்தை இழிவுபடுத்துவதாக இருப்பதால் யுவராஜ்சிங் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரியானா மாநிலம் ஹிசார் மாவட்டத்தில் உள்ள ஹன்சி போலீஸ் நிலையத்தில் தலித் உரிமைகள் ஆர்வலரான வக்கீல் ரஜத் கல்சன் என்பவர் புகார் செய்துள்ளார்.

இது குறித்து போலீசார் ஆதாரங்களை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் சாதிய ரீதியான சர்ச்சை குறித்து யுவராஜ்சிங் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், ‘சாதி, நிறம், மதம் மற்றும் பாலினம் உள்பட எந்தவகையான ஏற்றத்தாழ்வுகளையும் நான் ஒருபோதும் நம்புவது கிடையாது.

என்னுடைய வாழ்க்கையை மக்களுக்காக கொடுத்துள்ளேன். தொடர்ந்து மக்களின் நலனுக்காக வாழ்வேன். ஒவ்வொரு மனிதருக்கும் உள்ள சுயமரியாதையை நான் நம்புகிறேன். யாரையும் ஒதுக்காமல் அனைத்து மக்களையும் மதிக்கிறேன். நான் எனது நண்பர்களுடன் உரையாடலில் ஈடுபட்டு இருந்த போது நான் கூறிய வார்த்தை தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது என்பது எனக்கு தெரிகிறது. ஒரு பொறுப்புள்ள இந்திய குடிமகனாக என்னுடைய பேச்சு யாருடைய உணர்வையாவது காயப்படுத்தி இருந்தால் அதற்காக நான் வருத்தம் தெரிவித்து கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker