TAMIL

சர்வானை கடுமையாக சாடிய கெய்ல் மீது ஒழுங்கு நடவடிக்கை?

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் அங்கு நடத்தப்படும் கரிபீயன் பிரிமியர் லீக் (சி.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஜமைக்கா தலவாஸ் அணிக்காக விளையாடி வந்தார்.

இந்த சீசனில் அவரை தக்கவைக்காமல் அந்த அணி நிர்வாகம் கழற்றி விட்டது.

இதையடுத்து அவரை செயின்ட் லூசியா ஜோக்ஸ் அணி தேர்வு செய்தது.

பின்னர் கெய்ல் வெளியிட்ட யு-டியூப் வீடியோ பதிவில், ‘ஜமைக்கா அணியில் இருந்து விடுவிக்கப்படுவது குறித்து என்னிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை.

அந்த அணியின் பயிற்சியாளரும், வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் வீரருமான ராம்நரேஷ் சர்வான் தான் என்னை வெளியேற்றியதற்கு முக்கிய காரணம். அவர் கொரோனாவை விட மோசமானவர்.

ஒரு கொடிய பாம்பு. பழிவாங்கும் குணம் கொண்டவர், நம்ப வைத்து முதுகில் குத்தி விட்டார், முதிர்ச்சியற்றவர்’ என்று சரமாரியாக திட்டி தீர்த்தார்.

இதற்கு சர்வான் அளித்த விளக்கத்தில், ‘ஜமைக்கா அணியில் இருந்து கெய்ல் விடுவிக்கப்பட்ட முடிவில் எனக்கு துளியும் தொடர்பு கிடையாது. அது அணி நிர்வாகத்தின் முடிவு. கெய்ல் கூறிய குற்றச்சாட்டுகள் தவறானவை.

அவர் தேவையில்லாமல் பலரது பெயருக்கு களங்கம் கற்பித்து விட்டார்’ என்று கூறியிருந்தார்.

ஜமைக்கா அணி நிர்வாகமும், வர்த்தகம் மற்றும் கிரிக்கெட் காரணங்கள் அடிப்படையிலேயே கெய்ல் விடுவிக்கப்பட்டாரே தவிர, சர்வானுக்கு இதில் பங்கு இல்லை என்று தெளிவுப்படுத்தியது.

இந்த நிலையில் சர்வான் மீது பகிரங்கமாக சகட்டுமேனிக்கு குற்றச்சாட்டுகளை அள்ளி வீசிய 40 வயதான கெய்ல் மீது ஒழுங்கு நடவடிக்கை (போட்டியில் பங்கேற்க தடை அல்லது அபராதம்) பாயும் என்று தெரிகிறது.

இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய தலைவர் ரிக்கி ஸ்கெரிட் கூறுகையில், ‘ஒரு வீரர் கிளப் அல்லது லீக் அணிகள்

அல்லது வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டில் ஒப்பந்தம் செய்து கொள்ளும் போது, நடத்தை விதிகளை சரியாக பின்பற்ற வேண்டும்.

கெய்லின் செயலால் சி.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கு அவப்பெயர் ஏற்பட்டுள்ளது.

எனவே அவர் தண்டனையை எதிர்கொள்ள வேண்டி இருக்கும். குறிப்பிட்ட அணியுடன் கெய்ல் ஒப்பந்தத்தில் இருப்பதால் நிச்சயம் இந்த விவகாரம் குறித்து சி.பி.எல். நிர்வாகம் அவரிடம் பேசும் என்று நினைக்கிறேன்.

அவர்கள் கெய்ல் பிரச்சினையை எப்படி கையாளுகிறார்கள் என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இந்த சர்ச்சையால் கெய்லின் கிரிக்கெட் வாழ்க்கை முடிந்து விடாது என்று நம்புகிறேன்’ என்றார்.

‘கெய்லும், சர்வானும் ஒரு காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிறந்த நண்பர்களாக வலம் வந்தனர்.

நீண்ட காலம் இணைந்து விளையாடி, அணியை முன்னெடுத்து சென்று இருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர்கள், தற்போது நடந்த விதத்தை பார்ப்பதற்கு ஏமாற்றம் அளிக்கிறது. இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது’ என்றும் ஸ்கெரிட் குறிப்பிட்டார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker