நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் தொடக்க லீக் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையிடம் தோல்வி அடைந்தது. 2-வது லீக்கில் 49 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவை வீழ்த்தியது.
3-வது ஆட்டத்தில் சூப்பர் ஓவரில் பெங்களூருவிடம் சரண் அடைந்தது.
அடுத்த 2 ஆட்டங்களில் 48 ரன் வித்தியாசத்தில் பஞ்சாப்பையும், 34 ரன் வித்தியாசத்தில் ஐதராபாத்தையும் அடுத்தடுத்து வீழ்த்தி வெற்றி கண்டது.
மும்பை அணியின் பேட்டிங் மற்றும் பந்து வீச்சு வலுவான நிலையில் உள்ளது. பேட்டிங்கில் கேப்டன் ரோகித் சர்மா (176 ரன்கள்), பொல்லார்ட் (163 ரன்கள்), இஷான் கிஷன் (158 ரன்கள்), குயின்டான் டி காக் (115 ரன்கள்), ஹர்திக் பாண்ட்யா (105 ரன்கள்), சூர்யகுமார் யாதவ் (101 ரன்கள்) என்று பெரும் படையே இருக்கிறது.
பந்து வீச்சில் டிரென்ட் பவுல்ட் (8 விக்கெட்), பேட்டின்சன் (7 விக்கெட்), பும்ரா (7 விக்கெட் ), ராகுல் சாஹர் (6 விக்கெட்) ஆகியோர் எதிரணியினரை மிரட்டி வருகிறார்கள்.
முந்தைய 2 ஆட்டங்களில் தொடர்ச்சியாக பெற்ற வெற்றி நம்பிக்கையுடன் மும்பை அணி களம் இறங்குகிறது.
முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே 16 ரன் வித்தியாசத்தில் சென்னையையும், 4 விக்கெட் வித்தியாசத்தில் பஞ்சாப்பையும் தோற்கடித்தது.
அடுத்த 2 ஆட்டங்களில் 37 ரன் வித்தியாசத்தில் கொல்கத்தாவிடமும், 8 விக்கெட் வித்தியாசத்தில் பெங்களூருவிடமும் அடுத்தடுத்து தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் அணியின் பேட்டிங்கில் சஞ்சு சாம்சன் (171 ரன்கள்), கேப்டன் ஸ்டீவன் சுமித் (127 ரன்கள்), ராகுல் திவேதியா (101 ரன்கள்) ஆகியோர் வலுசேர்க்கிறார்கள்.
ஜோஸ் பட்லர் (3 ஆட்டங்களில் 47 ரன்), ராபின் உத்தப்பா (4 ஆட்டங்களில் 33 ரன்) ஏமாற்றம் அளித்து வருகிறார்கள். அவர்கள் நிலைத்து நின்று ஆடினால் ராஜஸ்தான் அணியின் பேட்டிங் வலுப்பெறும்.
பந்து வீச்சில் ஜோப்ரா ஆர்ச்சர் தனது அசுர வேகத்தால் குடைச்சல் கொடுத்து வருகிறார்.
ஆனால் சக வேகப்பந்து வீச்சாளர் ஜெய்தேவ் உனட்கட் (4 ஆட்டத்தில் ஒரு விக்கெட்) சோபிக்கவில்லை.
சிறிய மைதானமான சார்ஜாவில் தொடர்ச்சியாக 2 வெற்றியை ருசித்த ராஜஸ்தான் அணி மற்ற 2 மைதானங்களிலும் (துபாய், அபுதாபி) தடுமாறி வருகிறது. அதனை சரி செய்ய வேண்டிய நெருக்கடி அந்த அணிக்கு உள்ளது.
மும்பை அணி தனது வெற்றியை நீட்டிக்க முனைப்பு காட்டும்.
அதேநேரத்தில் சரிவில் இருந்து மீண்டு வெற்றிப் பாதைக்கு திரும்ப ராஜஸ்தான் அணி எல்லா வகையிலும் முயற்சிக்கும்.
அதிரடியாக ஆடக்கூடிய வீரர்கள் இரு அணியிலும் அதிகம் அங்கம் வகிப்பதால் இந்த போட்டியில் ரன் மழைக்கு குறைவு இருக்காது.