TAMIL

சம்பளம் குறைப்பு குறித்த இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவரின் கருத்து வேடிக்கையானது – கவாஸ்கர் கண்டனம்

கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக உலகமே ஸ்தம்பித்து போய் இருக்கிறது. சர்வதேச மற்றும் உள்ளூர் விளையாட்டு போட்டிகள் அனைத்தும் தள்ளிவைக்கப்பட்டுள்ளன.

வருகிற ஜூலை மாதம் தொடங்க திட்டமிடப்பட்டு இருந்த டோக்கியோ ஒலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டது.


கடந்த மாதம் (மார்ச்) ஆரம்பிக்க இருந்த ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி வருகிற 15-ந் தேதி வரை தள்ளிபோடப்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் முடிந்து உலக நாடுகள் சந்தித்துள்ள முடக்கம் மட்டுமின்றி, தடைபட்டுள்ள விளையாட்டு போட்டிகளும் சகஜ நிலைக்கு திரும்புவது எப்போது? என்பது கணிக்க முடியாத ஒன்றாகவே உள்ளது.

எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இடர்பாட்டால் சர்வதேச விளையாட்டு போட்டிகள் தள்ளிபோடப்பட்டதாலும், ரத்து செய்யப்பட்டதாலும் விளையாட்டு அமைப்புகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக இந்தியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்களுக்கும், பல நாடுகளின் கால்பந்து சங்கங்கள் மற்றும் கிளப்புகளுக்கும், உலக டென்னிஸ் சங்கத்துக்கும் அதிக அளவில் வருவாய் இழப்பு ஏற்படும் என்று தெரிகிறது.

இதனால் தங்களது ஒப்பந்த வீரர்களுக்கு வழங்க வேண்டிய ஊதியத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை குறைத்து வழங்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மற்றும் பல்வேறு கால்பந்து கிளப்புகள் முடிவு செய்து இருக்கின்றன.


இதற்கிடையில் கொரோனா தாக்கம் குறித்து இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவர் அசோக் மல்கோத்ரா கருத்து

தெரிவிக்கையில், ‘கொரோனா வைரஸ் பாதிப்பால் சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் பல ரத்து செய்யப்பட்டு இருப்பதால் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தில் பிடித்தம் செய்ய வேண்டும்’ என்று கூறியிருந்தார்.

இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவரின் இந்த கருத்துக்கு, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் எழுதி இருக்கும் ஒரு கட்டுரையில் கூறியிருப்பதாவது:

‘எந்தவொரு விளையாட்டிலும் நீங்கள் விளையாடாவிட்டால் உங்களுக்கு சம்பளம் கிடைக்காது.

அதுபோல் தான் இந்த விஷயத்திலும் நடக்கும்.


இந்தியாவை சேர்ந்த சர்வதேச கிரிக்கெட் வீரர்கள் மற்றும் முதல் தர வீரர்களுக்கான சம்பளத்தை குறைத்து வழங்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்க தலைவர் கருத்து தெரிவித்து இருந்ததை பார்க்க வேடிக்கையாக இருந்தது.

இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஆதரவாக செயல்பட வேண்டும் என்று அவர் முயற்சிக்கிறார் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது.

ஆனால் வீரர்கள் சம்பளம் குறைப்பு குறித்து பேச அவருக்கு அதிகாரம் கொடுத்தது யார்? என்பதே கேள்வியாகும்.

நடப்பு இந்திய சர்வதேச வீரர்கள் மற்றும் முதல் தர வீரர்கள் யாரும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தில் உறுப்பினராக இல்லை. எனவே வீரர்கள் சார்பில் அவரால் பேசமுடியாது.

உங்களது சொந்த பணத்தில் பாதிப்பு ஏற்படாதபட்சத்தில் சம்பளம் குறைப்பு குறித்து பேசுவது என்பது எளிதான விஷயம் தான்’. இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.

இந்த பிரச்சினை குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய பொருளாளர் அருண் துமால் ஏற்கனவே கருத்து தெரிவிக்கையில், ‘கொரோனா தாக்கத்தால் பெரிய பின்னடைவை சந்தித்து இருப்பது உண்மை தான்.


வீரர்களுக்கான சம்பளம் குறைப்பு குறித்து இந்திய கிரிக்கெட் வாரிய நிர்வாகிகள் யாரும் சிந்திக்கவில்லை.

எல்லா பிரச்சினைகளும் முடிவுக்கு வந்த பிறகு அனைத்து தரப்பினரின் நலனையும் கருத்தில் கொண்டு நியாயமான முடிவு எடுக்கப்படும்’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker