TAMIL

சமூக வலைதளத்தில் ஜோப்ரா ஆர்ச்சர் மீது இனவெறி சாடல் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் புகார்

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர், வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான 2-வது டெஸ்ட் போட்டிக்காக மான்செஸ்டருக்கு காரில் புறப்பட்ட போது வழியில் யாருக்கும் தெரியாமல் தனது வீட்டுக்கு சென்று வந்தது சர்ச்சையானது.

கொரோனா தடுப்பு உயிர்பாதுகாப்பு நடைமுறைகளை அவர் மீறியதால் 2-வது டெஸ்டில் இருந்து கழற்றி விடப்பட்டதுடன், அபராதமும் விதிக்கப்பட்டது.

பின்னர் 5 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட அவருக்கு இரண்டு முறை கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டு பாதிப்பு இல்லை என்பது உறுதியான பிறகே அணியுடன் மீண்டும் இணைந்து கொள்ள அனுமதி அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக சமுக வலைதளமான இன்ஸ்டாகிராம் மூலம் சிலர் அவரது நடத்தையை கேலி செய்ததுடன் இனவெறியுடன் திட்டியுள்ளனர்.

இது குறித்து ஜோப்ரா ஆர்ச்சர் கூறுகையில், ‘கால்பந்து வீரர் வில்பிரைட் ஜாஹா, 12 வயது சிறுவனால் இனவெறியுடன் மிரட்டப்பட்டதில் இருந்து இணையத்தில் எனக்கு என்று ஒரு எல்லையை வகுத்துள்ளேன்.

எந்த விஷயமும் அந்த எல்லையை மீற விடமாட்டேன். இன்ஸ்டாகிராமில் என்னை பற்றிய சிலரது இனவெறி பதிவுகளை சகித்துக் கொள்ள முடியவில்லை.

இது குறித்து நடவடிக்கை எடுக்க கோரி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்திடம் புகார் செய்துள்ளேன். இது சரியான முறையில் செல்லும் என்று நம்புகிறேன்’ என்றார்.

இந்த நிகழ்வால் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ள ஜோப்ரா ஆர்ச்சர் மேலும் கூறுகையில், ‘நான் என்ன தவறு செய்தேன் என்பதை அறிவேன். அதற்குரிய விளைவையும் அனுபவித்து விட்டேன்.

நான் ஒன்றும் கிரிமினல் குற்றம் செய்து விடவில்லை.

மீண்டும் உற்சாகமான மனநிலைக்கு திரும்ப விரும்புகிறேன்.

தற்போது மனரீதியாக நான் எப்படி இருக்கிறேன் என்பதை அறிய அணியின் மருத்துவருடன் சிறிது நேரம் பேசினேன்.

இது போன்ற கடினமான சூழலில் இருந்து எப்படி மீள்வது என்பது பற்றி சக வீரர் பென் ஸ்டோக்சும் அறிவுரை வழங்கினார்.

இப்போது போட்டியில் பங்கேற்பதற்கு மனதளவில் 100 சதவீதம் சரியாக இருக்க வேண்டியது அவசியமாகும்.

களம் இறங்கி விட்டால் அணிக்காக முழுமையான பங்களிப்பை அளிப்பேன்.

அதை என்னால் செய்ய முடியாது என்பதை உணரும் போது களம் இறங்க விரும்பமாட்டேன்.

ஒரு வேளை களம் இறங்கி மணிக்கு 90 மைல் வேகத்தில் பந்து வீசாவிட்டால் அதையும் பெரிதுப்படுத்துவார்கள்’ என்றார்.

இதன் மூலம் வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக மான்செஸ்டரில் நாளை தொடங்கும் கடைசி டெஸ்டில் ஜோப்ரா ஆர்ச்சர் ஆடுவது சந்தேகம் தான் என்பது தெளிவாகிறது.

25 வயதான ஜோப்ரா ஆர்ச்சர் வெஸ்ட் இண்டீஸ் தாயாருக்கும், இங்கிலாந்து தந்தைக்கும் பார்படோசில் பிறந்தவர் ஆவார்.

2015-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு இடம் பெயர்ந்து உள்ளூர் போட்டிகளில் ஆடிய அவர் அதன் மூலம் 2019-ம் ஆண்டு இங்கிலாந்து அணிக்குள் அடியெடுத்து வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker