அந்த அணியின் டேவிட் வார்னர், பேர்ஸ்டோ ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பேர்ஸ்டோவ் 7 ரன் எடுத்த நிலையில் சாம் கர்ரன் பந்தில் ஆட்டமிழந்தார்.
அடுத்து டேவிட் வார்னர் உடன் மணிஷ் பாண்டே ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி நிலைத்து நின்று விளையாடியது. மணிஷ் பாண்டே 35 பந்திலும், வார்னர் 50 பந்திலும் அரைசதம் அடித்தனர். டேவிட் வார்னர் 55 பந்தில் 57 ரன்களும், மணிஷ் பாண்டே 46 பந்தில் 64 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
4-வது வீரராக களம்இறங்கிய கேன் வில்லியம்சன் 10 பந்தில் 4 பவுண்டரி, ஒரு சிக்சருடன் 26 ரன்கள் அடிக்க சன்ரைசர்ஸ் ஐதராபாத் 20 ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் லுங்கி நிகிடி 2 விக்கெட்டும், சாம் கர்ரன் 1 விக்கெட்டும் வீழ்த்தினர்.
பின்னர் 172 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை சூப்பர் கிங்ஸ் பேட்டிங் செய்தது. ருத்துராஜ் கெய்க்வாட்- டு பிளிஸ்சிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.
இருவரும் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கெய்க்வாட் 36 பந்திலும், டு பிளிஸ்சிஸ் 32 பந்திலும் அரைசதம் அடித்தனர். இந்த ஜோடி விக்கெட்டை இழக்காமல் இலக்கை எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், ரஷித் கான் பந்து வீச்சில் ருத்துராஜ் 44 பந்தில் 12 பவுண்டரியுடன் 75 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.
டு பிளிஸ்சிஸ் – கெய்க்வாட் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 13 ஓவரில் 129 ரன்கள் குவித்தது. அடுத்து வந்த மொயீன் அலி 8 பந்தில் 15 ரன்கள் எடுத்த நிலையிலும், டு பிளிஸ்சிஸ் 38 பந்தில் 6 பவுண்டரி, 1 சிக்சருடன் 56 ரன்கள் எடுத்த நிலையிலும் ரஷித் கான் பந்தில் ஆட்டமிழந்தனர்.
4-வது விக்கெட்டுக்கு சுரேஷ் ரெய்னாவுடன் ஜடேஜா ஜோடி சேர்ந்தார். சென்னை சூப்பர் கிங்ஸ் 18.3 ஓவரில் இலக்கை எட்டி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரெய்னா 17 ரன்களுடனும், ஜடேஜா 7 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி சார்பில் ரஷித் கான் 36 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார்.