TAMIL
கோலி-ரோகித் சர்மாவை விட தெண்டுல்கர்-கங்குலி ஜோடியே சிறந்தது – இயான் சேப்பல் சொல்கிறார்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இயான் சேப்பல் இணையதளம் ஒன்றில் எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது:-
ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் இந்தியாவின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்கள் விராட் கோலியும், ரோகித் சர்மாவும் தான் என்ற விவாதம் இப்போது எழுந்துள்ளது.
ஆனால் இந்திய முன்னாள் பேட்ஸ்மேன்கள் சச்சின் தெண்டுல்கர்-சவுரவ் கங்குலி போன்று தரமான பந்து வீச்சாளர்களை இவர்கள் எதிர்கொண்டார்களா? என்ற கேள்வியை முன் வைக்கிறேன்.
தெண்டுல்கரும், கங்குலியும் தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கிய காலக்கட்டத்தில் ஒவ்வொரு சர்வதேச அணியிலும் உலகத்தரம் வாய்ந்த இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள் வலம் வந்தனர்.
பாகிஸ்தான் அணியில் வாசிம் அக்ரம், வாக்கர் யூனிஸ், வெஸ்ட் இண்டீஸ் அணியில் அம்புரோஸ், வால்ஷ், ஆஸ்திரேலிய அணியில் கிளைன் மெக்ராத், பிரெட்லீ, தென்ஆப்பிரிக்காவில் ஆலன் டொனால்டு, ஷான் பொல்லாக், இலங்கை அணியில் மலிங்கா, சமிந்தா வாஸ் என்று பேட்ஸ்மேன்களுக்கு சோதனை கொடுக்கக்கூடிய பவுலர்கள் இருந்தனர்.
இத்தகைய சவாலான பந்து வீச்சை தெண்டுல்கரும், கங்குலியும் எதிர்கொண்டு ரன் குவித்தனர்.
பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இம்ரான் கான், ஒருவரின் திறமையை எதிராளியை வைத்தே மதிப்பிடலாம் என்று கூறுவார்.
எனவே தரமான எதிரணி பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டதில் இருந்தே அவர்கள் யார் என்பதை மதிப்பிடலாம்.
அதே நேரத்தில் கோலி, ரோகித் சர்மா இப்போது எவ்வளவு இன்னிங்ஸ்களில் விளையாடி இருக்கிறார்களோ அதே அளவுக்கு தெண்டுல்கர், கங்குலியின் இன்னிங்ஸ்களை கணக்கிட்டு புள்ளி விவரங்களை ஒப்பிட்டு பார்த்தால், கோலி, ரோகித் சர்மா தான் முன்னணியில் இருப்பார்கள்.
20 ஓவர் மற்றும் ஒரு நாள் கிரிக்கெட்டில் கோலி 50 ரன்களுக்கு மேல் சராசரியை கொண்டு நம்ப முடியாத நிலையை எட்டியிருக்கிறார்.
ஒரு நாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த முதல் வீரராக தெண்டுல்கர் இருந்தாலும், அதை காட்டிலும் ரோகித் சர்மா 3 இரட்டை சதங்கள் விளாசியிருக்கிறார்.
இவ்வாறு இயான் சேப்பல் அதில் கூறியுள்ளார்.