CRICKETLATEST UPDATESNEWSTAMIL
கோலி இல்லாததால் மற்ற பேட்ஸ்மேன்களுக்கு நெருக்கடியாக இருக்கும் – ரிக்கிபாண்டிங் சொல்கிறார்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கிபாண்டிங் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:-
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி 3 டெஸ்டில் விராட் கோலி விளையாடாதது (குழந்தை பிறப்புக்காக தாயகம் திரும்புகிறார்), அவரது பேட்டிங் மற்றும் கேப்டன்ஷிப் வகையில் இந்தியாவுக்கு நிச்சயம் இழப்பாகும். அவர் இல்லாவிட்டால் அணியில் உள்ள மற்ற பேட்ஸ்மேன்கள் சற்றே நெருக்கடியாக உணர்வார்கள். கோலிக்கு பதிலாக ரஹானே கேப்டன் பொறுப்பை ஏற்பார் என்று நினைக்கிறேன். இது அவருக்கு கூடுதல் நெருக்கடியாகும். அது மட்டுமின்றி முக்கியத்துவம் வாய்ந்த 4-வது பேட்டிங் வரிசைக்கு பொருத்தமான வீரரை அவர்கள் (இந்தியா) கண்டுபிடித்தாக வேண்டும்.
கடைசி 3 டெஸ்டில் மட்டுமல்ல, முதலாவது டெஸ்டில் கூட பேட்டிங் வரிசையில் யார்-யார் இடம் பெறுவார்கள் என்பதில் இந்திய அணி நிர்வாகம் தெளிவான மனநிலையில் இல்லை என்றே தோன்றுகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக இறங்கப்போவது யார்? விராட் கோலி சென்று விட்டால் அந்த இடத்தில் களம் காணுவது யார்? இதே போல் வேகப்பந்து வீச்சாளர்களில் அனுபவம் வாய்ந்த பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ், இளம் வீரர்கள் நவ்தீப் சைனி, முகமது சிராஜ் ஆகியோரில் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும்? ஒரே சுழற்பந்து வீச்சாளர் இடத்திற்கு யார் சேர்க்கப்படுவார்? இப்படி நிறைய கேள்விகள் எழுகிறது.
ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் டேவிட் வார்னருடன், ஜோ பர்ன்சை தொடக்க வீரராக (புதுமுக பேட்ஸ்மேன் புகோவ்ஸ்கியை தொடக்க வீரராக ஆட வைக்க பரிசீலனை செய்யப்படுகிறது) இறக்க வேண்டும். சமீபத்தில் நடந்த சில உள்ளூர் போட்டிகளில் அவர் சரியாக ஆடாதது பற்றி மட்டுமே பேசுகிறார்கள். ஆனால் கடந்த சீசனில் பிரிஸ்பேனில் நடந்த முதலாவது டெஸ்டில் அவர் சிறப்பாக விளையாடியதை மறந்து விடக்கூடாது.
இவ்வாறு பாண்டிங் கூறினார்.