TAMIL
கொல்கத்தாவில் நாளை நடக்கும் ஐ.பி.எல். ஏலப்பட்டியலில் 11 தமிழக வீரர்கள்
13-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் நடக்கிறது.
இந்த போட்டிக்கான வீரர்களின் ஏலம் கொல்கத்தாவில் நாளை (வியாழக்கிழமை) நடக்கிறது. ஏலப்பட்டியலில் மொத்தம் 146 வெளிநாட்டு வீரர்கள் உள்பட 332 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இதில் இருந்து 73 வீரர்கள் ஏலம் மூலம் அணிக்கு தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக ரூ.85 கோடியை ஏலத்தில் செலவிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதில் ஏற்கனவே தக்க வைத்துள்ள வீரர்களுக்கான ஊதியத்தை கழித்து மீதமுள்ள தொகையைத் தான் ஏலத்தில் பயன்படுத்த முடியும்.
உதாரணமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 20 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான ஒட்டுமொத்த சம்பளத் தொகை ரூ.70.40 கோடி போக மீதமுள்ள ரூ.14.60 கோடியை கொண்டு தங்களது அணிக்கு தேவையாக உள்ள எஞ்சிய 5 வீரர்களை எடுக்க முடியும்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய வீரர்களின் அடிப்படை விலை ரூ.50 லட்சம், ரூ.75 லட்சம், ரூ.1 கோடி, ரூ.1½ கோடி, ரூ.2 கோடி ஆகும்.
இதில் ஆஸ்திரேலியாவின் பேட் கம்மின்ஸ், ஹேசில்வுட், மிட்செல் மார்ஷ், கிறிஸ் லின், மேக்ஸ்வெல், தென்ஆப்பிரிக்காவின் ஸ்டெயின், இலங்கையின் மேத்யூஸ் ஆகிய 7 வீரர்களின் தொடக்க விலை அதிகபட்சமாக ரூ.2 கோடியாகும்.
இவர்களின் விலை ரூ.2 கோடியில் இருந்து ஆரம்பிக்கும்.
சர்வதேச போட்டிகளில் ஆடாத வீரர்களுக்கு ரூ.20 லட்சம், ரூ.30 லட்சம், ரூ.40 லட்சம் என்று அடிப்படை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ஏலப்பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த 11 வீரர்கள் அங்கம் வகிக்கிறார்கள்.
இவர்கள் அனைவரும் டி.என்.பி.எல். கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்றவர்கள் ஆவர்.
இதில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக கலக்கிய வேகப்பந்து வீச்சாளர் சேலத்தை சேர்ந்த ஜி.பெரியசாமி கவனத்தை ஈர்த்துள்ளார்.
26 வயதான பெரியசாமி மலிங்கா சாயலில் யார்க்கர் வீசுவதில் கில்லாடி.
இந்த ஆண்டு நடந்த டி.என்.பி.எல். தொடரில் 9 ஆட்டத்தில் 21 விக்கெட்டுகளை சாய்த்து சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் வெற்றிக்கு பக்கபலமாக இருந்தார்.
இவரது அடிப்படை விலை ரூ.20 லட்சம் ஆகும்.
இதே போல் கடந்த முறை ரூ.8.4 கோடிக்கு விலை போன சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி, சாய் கிஷோர், சித்தார்த், மணிகண்டன், அருண் கார்த்திக், ஹரி நிஷாந்த், பாபா அபராஜித், முகமது, எம்.அபினவ், ஷாருக் கான் ஆகிய தமிழக வீரர்களும் இறுதிக்கட்ட ஏலப்பட்டியலில் உள்ளனர்.
ஏலம் விடுவதில் பிரபலமான இங்கிலாந்தை சேர்ந்த ஹக் எட்மீட்ஸ் ஐ.பி.எல். ஏலத்தை நடத்துகிறார்.
பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும் ஏல நிகழ்ச்சி ஸ்டார் ஸ்போர்ட்ஸ்1, ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனல்களில் நேரடி ஒளிபரப்பு செய்யப்படுகிறது.