TAMIL

கொரோனா பாதிப்பு: சம்பள பிடித்தம் செய்யப்பட்டால் ஏற்க பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் தயார் – கேப்டன் அசார் அலி தகவல்

கொரோனா வைரசின் கோரத்தாண்டவத்தால் உலகமே விழிபிதுங்கி நிற்கிறது. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்து இருப்பதுடன் பல்வேறு நாடுகளின் பொருளாதாரமும் பெருத்த சரிவை சந்தித்துள்ளது.

சர்வதேச போட்டிகள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாலும், தள்ளி வைக்கப்பட்டுள்ளதாலும் விளையாட்டு அமைப்புகள் பெருத்த பின்னடைவை சந்தித்துள்ளன.


வருவாய் இழப்பு காரணமாக ஆஸ்திரேலியா, இங்கிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் தங்கள் நாட்டின் ஒப்பந்த வீரர்களுக்கு வழங்கும் சம்பளத்தில் குறிப்பிட்ட சதவீதத்தை பிடித்தம் செய்துவிட்டு வழங்குவது குறித்து ஆலோ சித்து வருகின்றன.

கொரோனா அச்சுறுத்தலால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அந்த நாட்டு கிரிக்கெட் வாரிய ஒப்பந்த பட்டியலில் 19 சர்வதேச வீரர்கள் இடம் பெற்றுள்ளனர்.

அவர்கள் தங்கள் கிரேடுக்கு தகுந்தபடி மாதந்தோறும் சுமார் ரூ.3 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை ஊதியமாக பெற்று வருகிறார்கள்.

கொரோனா பாதிப்பு காரணமாக வீரர்களின் சம்பளத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கைவைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் பாகிஸ்தான் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் கேப்டன் அசார் அலி வீடியோகான்பரன்ஸ் மூலம் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:


கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது எந்தவொரு நாட்டிலும் நல்ல சூழ்நிலை இல்லை.

இந்த ஊரடங்கு நிலைமை இன்னும் சில மாதம் தொடர்ந்தால், பழைய மற்றும் புதிய ஒப்பந்தத்தில் இருக்கும் வீரர்களின் சம்பளத்தை குறைத்துக் கொள்ளும்படி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கேட்கும்.

அதுபோன்ற சூழ்நிலை உருவாகி, எங்களது சம்பளத்தை குறைத்து கொள்ளும்படி கேட்கப்படுமானால் அதனை ஏற்றுக்கொள்ள மனரீதியாக நாங்கள் தயாராக இருக்கிறோம்.

அந்த சமயத்தில் நாங்கள் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் அமர்ந்து பேசி நல்ல முடிவை எடுப்போம்.

கிரிக்கெட் போட்டிகள் எதுவும் இல்லாத இந்த நிலை தொடருமானால், ரசிகர்கள் இன்றி பூட்டிய ஸ்டேடியத்தில் கிரிக்கெட் போட்டியை நடத்தும் வாய்ப்பு குறித்து ஆலோசிக்கலாம்.


அதற்கு போட்டி நடைபெறும் இடத்தில் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முழுமையாக எடுக்கப்பட வேண்டியது அவசியமானதாகும்.

கிரிக்கெட் போட்டிகளை டெலிவிஷனில் கூட ரசிகர்கள் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டு இருப்பது எதிர்பாராததாகும்.

பூட்டிய ஸ்டேடியத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெறுமானால், டெலிவிஷனிலாவது கிரிக்கெட் போட்டியை பார்க்கும் வாய்ப்பு ரசிகர்களுக்கு கிடைக்கும்.

இருப்பினும் பொதுக்களின் பாதுகாப்பு விஷயத்தில் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளமாட்டோம்.


வருகிற ஜூன் மாதம் இறுதிவரை அனைத்து வீரர் களுக்கும் மாதாந்திர ஊதியம் வழங்கப்படும் என்று கிரிக்கெட் வாரியம் உறுதி அளித்துள்ளது.

கொரோனாவினால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி தொடர் பாதிக்கப்பட்டு இருப்பதால் அந்த போட்டியின் கால அவகாசத்தை நீட்டிக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker