TAMIL
கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா-பாகிஸ்தான் நலநிதி கிரிக்கெட் நடத்த வேண்டிய அவசியமில்லை – அக்தர் யோசனைக்கு கபில்தேவ் பதில்
கொரோனா பாதிப்பு காரணமாக ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடியான தருணத்தில் நலநிதி திரட்டுவதற்காக இந்தியா-பாகிஸ்தான்
அணிகள் இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் போட்டி தொடரை நடத்தி அதில் கிடைக்கும் வருவாயை
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக இரு நாடுகளும் சரிசமமாக பகிர்ந்து கொள்ளலாம் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின்
முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கருத்து தெரிவித்து இருந்தார்.
தற்போது நிலவும் சூழ்நிலையில் முன்னேற்றம் காணும் போது துபாய் போன்ற பொதுவான இடத்தில் ரசிகர்கள் இன்றி பூட்டிய மைதானத்தில் இந்த போட்டியை நடத்தலாம் என்றும் அவர் யோசனை தெரிவித்திருந்தார்.
அக்தரின் யோசனை சாத்தியமற்றது என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
சோயிப் அக்தர் அவரது விருப்பத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.
ஆனால் நம்மை பொறுத்தமட்டில் பணம் திரட்ட வேண்டிய அவசியமில்லை.
பணம் நமக்கு போதுமான அளவில் உள்ளது. தற்போது நிலவும் இந்த நெருக்கடி நிலையை சமாளிக்க நமது அரசு துறைகள் எப்படி ஒருங்கிணைந்து செயல்படுகிறது என்பது தான் முக்கியமானதாகும்.
நமது அரசியல்வாதிகள் நிறைய பழி சுமத்தும் ஆட்டத்தில் ஈடுபடுவதை டெலிவிஷனில் இன்னும் பார்க்க முடிகிறது.
இதனை நிறுத்தி கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.
கொரோனா நிவாரண பணிகளுக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் பெரிய தொகையை (ரூ.51 கோடி) வழங்கி இருக்கிறது.
தேவைப்பட்டால் இன்னும் அதிகமான தொகையை நன்கொடையாக கொடுக்கக்கூடிய நிலையில் தான் இந்திய கிரிக்கெட் வாரியம் உள்ளது.
அதற்காக நிதி திரட்ட வேண்டிய அவசியமில்லை.
இந்த இக்கட்டான சூழ்நிலை விரைவில் முடிந்து உடனடியாக சகஜ நிலை திரும்புவது போல் தெரியவில்லை.
இது போன்ற நேரத்தில் கிரிக்கெட் போட்டியை நடத்துவது என்பது நமது வீரர்களை இக்கட்டான நிலைக்குள் தள்ளுவதாகும்.
அதனை செய்ய வேண்டிய தேவையும் நமக்கில்லை.
இந்த போட்டிகளின் மூலம் எந்த அளவுக்கு பணம் திரட்டி விட முடியும்.
என்னை பொறுத்தமட்டில் அடுத்த 5 முதல் 6 மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டி குறித்து நினைத்து கூட பார்க்க முடியாது.
கொரோனாவுக்கு எதிரான போரில் முன்னின்று போராடும் ஆஸ்பத்திரி ஊழியர்கள், போலீசார் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களின் நலனில் அக்கறை செலுத்த வேண்டியதே முதன்மையானதாகும்.
மற்றவர்களுக்கு உதவுவது நமது கலாசாரமாகும். மற்ற நாடுகளுக்கு நாம் உதவுவதை நினைத்து பெருமைப்படுகிறேன்.
மற்றவர்களுக்கு உதவி செய்து விட்டு பிறகு அதற்கான பலனை நாம் எதிர்பார்க்கக்கூடாது.
அடுத்தவர்களிடம் இருந்து வாங்குவதை விட, மற்றவர்களுக்கு மேலும், மேலும் கொடுக்கக்கூடிய நாடாக இருக்க நாம் முயல வேண்டும்.
நெல்சன் மண்டேலா சிறைச்சாலையில் சிறிய அறையில் 27 ஆண்டுகள் தங்கி இருந்தார்.
அதனோடு ஒப்பிடுகையில் தற்போது நாம் வீட்டில் நல்ல நிலையில் தான் இருக்கிறோம்.
இந்த தருணத்தில் உயிரை விட பெரிய விஷயம் எதுவுமில்லை. அதனை காக்க வேண்டியது அவசியமானதாகும்.
இவ்வாறு கபில்தேவ் கூறினார்.