TAMIL
கொரோனா தடுப்புக்கு அள்ளி கொடுத்த இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள்! சம்பளத்தை குறைத்து கொண்டனர்
கொரோனா வைரஸ் தடுப்புக்கு இங்கிலாந்து கிரிக்கெட் அணி வீரர்கள் ரூ. 4.7 கோடி நிதியுதவி தர முன்வந்துள்ளனர்.
இங்கிலாந்தில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமாக உள்ளது. பாரம்பரியமான விம்பிள்டன் டென்னிஸ், இரண்டாவது உலகப் போருக்குப் பின் முதன் முறையாக ரத்தானது.
வரும் மே 28 ம் திகதி வரை இங்கு எவ்வித கிரிக்கெட் தொடர்களும் நடக்காது என கூறப்படுகிறது. இதனால் இங்கிலாந்து கிரிக்கெட் போர்டுக்கு (இ.சி.பி.,) ரூ. 2,823 கோடி இழப்பு ஏற்பட உள்ளது.
இதுகுறித்து கிரிக்கெட் வீரர்கள் சங்கம் நேற்று விவாதித்தது. முடிவில், கிரிக்கெட் போர்டு ஒப்பந்தத்தில் உள்ள வீரர்கள் தங்களது அடுத்த மூன்று மாத சம்பளத்தில் 20 சதவீதம் குறைத்துக் கொள்வது, இதற்கான முதற்கட்ட தொகையான ரூ. 4.7 கோடியை இ.சி.பி., யிடம் தர வேண்டும்.
கிரிக்கெட் விளையாட்டு மற்றும் சமூகத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை சமாளிக்க, இ.சி.பி.,க்கு உதவுவது, என முடிவெடுக்கப்பட்டது.
அதேபோல இங்கிலாந்து வீராங்கனைகளும் தங்களது ஏப்ரல், மே, ஜூன் மாத சம்பளத்தில் 20 சதவீதத்தை குறைத்துக் கொள்ள முன்வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.