TAMIL
கொரோனாவினால் தனிமைப்படுத்தப்பட்டால் யாருடன் இருக்க விரும்புவீர்கள்?ஸ்டெயின் ருசிகரம்
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி கொரோனா அச்சத்தால் தொடரை பாதியில் ரத்து செய்து விட்டு தாயகம் திரும்பியது.
அவர்களுக்கு கொரோனா நோய் தொற்று இருக்கிறதா என்று அறிய 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இந்திய தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணியில் முன்னனி வேகப்பந்து வீச்சாளர் டேல் ஸ்டெயின் இடம் பெறவில்லை.
அந்த நேரம் அவர் பாகிஸ்தானில் நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் (பி.எஸ்.எல்.) இஸ்லாமாபாத் யுனைடட் அணிக்காக விளையாடினார்.
அந்த போட்டியும் லீக் சுற்றுடன் நின்று போனதால் அவரும் சொந்த நாட்டுக்கு திரும்பி விட்டார்.
ஸ்டெயினிடம், உங்களை ஒரு வீரருடன் தனிமைப்படுத்த விரும்பினால் யாரை தேர்வு செய்வீர்கள் என்று கேட்கப்பட்டது.
அதற்கு கலகலப்பாக பதிலளித்த ஸ்டெயின், ‘தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் குயின்டான் டி காக்குடன் என்னை தனிமைப்படுத்திக் கொள்ள விரும்புவேன்’ என்றார்.
அதற்குரிய காரணத்தையும் விளக்கினார். ஸ்டெயின் கூறுகையில், ‘இந்த உலகில் எனக்கு பிடித்த மனிதர்களில் டி காக்கும் ஒருவர்.
அவரது ஓட்டல் அறைக்கு நீங்கள் சென்று பார்த்தால் அவர் மீன் பிடிக்கும் வீடியோ அல்லது சமையல் கலை வீடியோக்களை பார்த்து கொண்டு இருப்பார்.
வீட்டிலும் அவரது பொழுது போக்கு இது தான்.
எனக்கு சமையல் செய்வது பிடிக்காது. ஆனால் அவர் சமையல் செய்வதில் கில்லாடி.
எல்லா வகையான உணவுகளையும் சமைப்பார்.
அவர் ஒரு நல்ல சமையல்காரர்.
எனவே அவருடன் இருந்தால் நன்றாக சாப்பிடலாம்.
அதேநேரம் வேகப்பந்து வீச்சாளர் பெலக்வாயோ கேட்கும் இசை தொகுப்புகளை முழுவதும் கேட்க வேண்டும் என்று ஆசைப்பட்டால் அவருடன் இருக்க விரும்புவேன்.
வழக்கமாக ஓய்வு நேரங்களில் ஜாலியாக மீன் பிடிக்க செல்வேன் அல்லது அலைச்சறுக்கில் ஈடுபடுவேன்.
தற்போது எங்கும் கொரோனா பீதி நிலவுவதால் வீட்டிலேயே இருக்கிறேன்’ என்றார்.