TAMIL
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தெண்டுல்கர் ரூ.50 லட்சம் நிதியுதவி
சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் முழுவதையும் தனது கோர முகத்தால் நடுங்க வைத்து வருகிறது.
இதன் தாக்கத்தில் இருந்து இந்தியாவும் தப்பவில்லை.
வேகமாக பரவி வரும் இந்த நோயால் நமது நாட்டில் 700-க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நோயின் தாக்கம் பரவாமல் தடுக்க விழிப்புணர்வுடன் வீட்டில் தனித்து இருப்பதே சரியான வழியாகும் என்று பிரதமர் மோடி நாட்டு மக்களை வலியுறுத்தி கேட்டுக்கொண்டு இருக்கிறார்.
அத்துடன் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனாவினால் பாதிக் கப்பட்டவர்களை காக்க மருத்துவ துறையினர் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் சிகிச்சை அளித்து போராடி வருகிறார்கள்.
கொரோனாவினால் பாதிப்புக்குள்ளாகி இருப்பவர்களுக்கு உதவ வெளிநாட்டு கால்பந்து வீரர்கள் உதவிக்கரம் நீட்டி இருப்பது போல், நமது நாட்டு வீரர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்து இருக்கிறார்கள்.
இந்த நோயினால் பாதித்த ஏழை மக்களுக்கு உதவும் விதமாக இந்திய கிரிக்கெட் வாரிய தலைவரும், இந்திய கிரிக்கெட் அணியின்
முன்னாள் கேப்டனுமான சவுரவ் கங்குலி ரூ.50 லட்சம் மதிப்பில் அரிசி வழங்குவதாக ஏற்கனவே அறிவித்து இருந்தார்.
இதேபோல் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து ரூ.10 லட்சம் வழங்கினார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரும், எம்.பி.யுமான கவுதம் கம்பீர் டெல்லியில் கொரோனாவினால்
பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உபகரணங்கள் வாங்குவதற்காக தனது தொகுதி நிதியில் இருந்து ரூ.50 லட்சத்தை ஒதுக்கினார்.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ள இந்திய மல்யுத்த வீரர் பஜ்ரங் பூனியா தனது 6 மாத சம்பளத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
பஜ்ரங் பூனியா ரெயில்வேயில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் கொரோனா குறித்து வீடியோ மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கொரோனாவினால் பாதித்தவர்களுக்கு உதவ ரூ.50 லட்சம் வழங்கி உள்ளார்.
அதில் ரூ.25 லட்சத்தை மராட்டிய முதல்- மந்திரி நிவாரண நிதிக்கும், மற்றொரு ரூ.25 லட்சத்தை பிரதமர் நிவாரண நிதிக்கும் வழங்கி இருக்கிறார்.
இதேமாதிரி இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், மேற்கு வங்காள விளையாட்டுத் துறை மந்திரியுமான லட்சுமி ரத்தன் சுக்லா தனது 3 மாத எம்.எல்.ஏ. சம்பளத்தையும், தன்னுடைய 3 மாத இந்திய கிரிக்கெட் வாரிய பென்சனையும் கொரோனா நிவாரண நிதிக்காக வழங்கியுள்ளார்.
ஆசிய விளையாட்டு போட்டியில் 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்றவரான இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனையும், இந்தியன் ஆயில் அதிகாரியுமான ஹிமாதாஸ் தனது ஒரு மாத சம்பளத்தை அசாம் முதல்-மந்திரி நிவாரண நிதிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளார்.