TAMIL
கிரிக்கெட் விசயத்தில் டோனி ஒருபோதும் பாகுபாடு பார்க்கமாட்டார் – ஆர்.பி.சிங்
* ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக போலீசாரிடம் சிக்கிய இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள்
வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்துக்கு இந்திய கிரிக்கெட் வாரியம் விதித்த ஆயுட்கால தடையை, கோர்ட்டு உத்தரவின்படி விசாரண நடத்திய இந்திய கிரிக்கெட் வாரிய நன்னடத்தை அதிகாரி டி.கே.ஜெயின் 7 ஆண்டுகளாக குறைத்தார்.
இதன்படி அவரது தடைக்காலம் வருகிற செப்டம்பர் மாதம் முடிவுக்கு வருகிறது.
இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த 37 வயதான ஸ்ரீசாந்த் அளித்த ஒரு பேட்டியில், ‘இந்திய அணிக்காக மீண்டும் விளையாட முடியும் என்ற நம்பிக்கையுடன் இருக்கிறேன்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி எனது ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
அதில் விளையாட வேண்டும் என்பது எனது குறிக்கோளாகும். கேரள அணியில் இடம் பிடிப்பது எனது முதல் இலக்காகும்.
அதில் தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும்.
இந்திய அணியில் இடம் பிடிக்க என்னென்ன செய்ய வேண்டுமோ? அதனை எல்லாம் செய்வேன்’ என்று தெரிவித்துள்ளார்.
* இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆர்.பி.சிங் ஒரு டெலிவிஷன் நிகழ்ச்சியில் பேசுகையில், ‘டோனியுடனான எனது நட்பு வேறானதாகும்.
அதனை கேப்டன் பதவியுடன் சேர்த்து பார்க்கக்கூடாது.
இருவரும் ஆட்ட தரத்தை மேம்படுத்துவது குறித்து தான் ஆலோசிப்போம்.
கிரிக்கெட் விசயத்தில் முடிவு எடுப்பதில் டோனி ஒருபோதும் பாகுபாடு பார்க்கமாட்டார்.
யாருக்கும் சாதகமாக செயல்படமாட்டார். அதனால் தான் அவர் இன்றும் டோனியாகவே விளங்குகிறார்’ என்று கூறினார்.
* சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் ஊழல் தடுப்பு விதிமுறையை மீறி செயல்பட்டதாக 2 ஆண்டு தடை விதிக்கப்பட்ட வங்காளதேச கிரிக்கெட் அணியின் ஆல்-ரவுண்டர் ஷகிப் அல்ஹசன், தடை காலம் முடிந்து வருகிற அக்டோபர் 29-ந்தேதி மீண்டும் களம் திரும்ப முடியும்.
இந்த நிலையில் ஷகிப் அல்ஹசன் அளித்த ஒரு பேட்டியில், ‘மீண்டும் ஆட்டத்துக்கு திரும்ப வர வேண்டும் என்று விரும்புகிறேன்.
எந்த நிலையில் நான் ஆட்டத்தை நிறுத்தினேனோ?, அதேநிலையில் மீண்டும் தொடங்க வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் அது சவாலான விஷயமாகும்’ என்று தெரிவித்துள்ளார்.
* பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் இன்ஜமாம் உல்ஹக் அளித்த ஒரு பேட்டியில், ‘டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த பாகிஸ்தான் வீரர் என்ற பெருமைக்குரிய ஹனிப் முகமதுவின் சாதனையை (337 ரன்கள், 1958-ம் ஆண்டில் வெஸ்ட்இண்டீசுக்கு எதிராக) முறியடிக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் நினைத்தது இல்லை’ என்று தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் வீரர்களில் டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள் குவித்த 2-வது வீரர் இன்ஜமாம் (329 ரன்கள், 2002-ம் ஆண்டு நியூசிலாந்துக்கு எதிராக) ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.