TAMIL
‘கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்களை தூக்கில் போட வேண்டும்’ – பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் மியாண்டட் ஆவேசம்
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பயிற்சியாளருமான 62 வயது ஜாவித் மியாண்டட் தனது யூடியூப் சேனலில் பேசுகையில் கூறியதாவது:
‘கிரிக்கெட் போட்டியில் ‘ஸ்பாட் பிக்சிங்‘ உள்பட எத்தகைய சூதாட்டத்திலும் ஈடுபட்டு அணிக்கோ, நாட்டுக்கோ அவப்பெயர் ஏற்படுத்தும் வீரர்கள் மீது எனக்கு எந்தவித அனுதாபமும் கிடையாது. ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபடும் வீரர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும்.
ஸ்பாட் பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களை தூக்கில் போட வேண்டும்.
ஏனெனில் இதுவும் ஒருவரை கொலை செய்வது போன்ற குற்றம் தான். எனவே இதற்கான தண்டனை கொலை குற்றவாளிகளுக்கு அளிக்கப்படுவது போல் இருக்க வேண்டும்.
சூதாட்டத்தில் ஈடுபவர்களுக்கு தூக்கு தண்டனை அளித்து முன்னுதாரணத்தை உருவாக்கினால், எந்தவொரு வீரரும் சூதாட்டத்தில் ஈடுபடுவது குறித்து நினைத்துக்கூட பார்க்கமாட்டார்கள்.
சூதாட்டம் என்பது எங்களது மத கொள்கைக்கு (இஸ்லாம்) எதிரான விஷயமாகும். மத போதனைக்கு மதிப்பளித்து நடந்து கொள்ள வேண்டும்.
கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்களுக்கு மன்னிப்பு அளிப்பதன் மூலம் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தவறு இழைக்கிறது.
இதுபோன்ற மோசமான செயலில் ஈடுபடுவோரை மீண்டும் விளையாட அனுமதிப்பவர்கள் தங்களது செயலை நினைத்து வெட்கப்பட வேண்டும்.
சூதாட்ட செயலில் ஈடுபடும் வீரர்கள் தங்களது சொந்த குடும்பத்துக்கோ, பெற்றோருக்கோ கூட உண்மையாக இருக்கமாட்டார்கள் என்று நான் நினைக்கிறேன்.
அப்படியிருந்தால் அவர்கள் ஒரு போதும் இதுபோன்ற செயலில் ஈடுபடமாட்டார்கள். ஆன்மிக ரீதியாக அவர்கள் தெளிவற்றவர்கள். மனிதநேய அடிப்படையில் இதுமாதிரியான செயல்பாடுகள் சரியானது கிடையாது.
இத்தகைய செயலில் ஈடுபடுபவர்கள் வாழ்வதற்கு தகுதியற்றவர்கள்.
பாகிஸ்தான் கிரிக்கெட்டை பொறுத்தவரையில் இதுபோன்ற ஊழல் நடவடிக்கையில் ஈடுபடுவதும், அதனை பயன்படுத்தி பணம் சம்பாதிப்பதும், அதன் பிறகு தங்களுக்குரிய செல்வாக்கு மற்றும் தொடர்பை பயன்படுத்தி மீண்டும் அணிக்கு திரும்புவதும் எளிதான விஷயமாக இருக்கிறது.
வீரர்கள் தங்களது ஆட்டத்தில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். தங்களது திறமையின் மூலம் களத்தில் சிறப்பாக செயல்பட்டு தான் பணத்தை சம்பாதிக்க வேண்டும்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி சிறப்பாக செயல்பட வேண்டும் என்று நாட்டு மக்கள் பலரும் பிரார்த்திக்கிறார்கள்.
நாட்டு மக்களின் நம்பிக்கையை தகர்க்கும் வகையில் செயல்படுபவர்களுக்கு மன்னிப்பு அளித்து அணியில் மீண்டும் விளையாட அனுமதிப்பது சரியானதா?. இவ்வாறு ஜாவித் மியாண்டட் கூறியுள்ளார்.