TAMIL
கிரிக்கெட்டில் ‘மேட்ச் பிக்சிங்’கை தடுக்க சட்டம் இந்திய அரசுக்கு ஐ.சி.சி. வலியுறுத்தல்
கிரிக்கெட் போட்டிக்கு சர்வதேச அளவில் மிகப்பெரிய சவாலாக இருப்பது ‘மேட்ச் பிக்சிங்’ என்ற சூதாட்டம் தான். பணத்துக்கு ஆசைப்பட்டு சூதாட்ட தரகர்கள் வீசும் வலையில் சிக்கி பல வீரர்கள் தங்களது கிரிக்கெட் வாழ்க்கையை இழந்துள்ளனர்.
மேட்ச் பிக்சிங்கை தடுக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டாலும் அவ்வப்போது சர்ச்சை கிளம்புவது உண்டு.
இலங்கை கிரிக்கெட் வாரியம், மேட்ச் பிக்சிங்கை கிரிமினல் குற்றத்தின் கீழ் கொண்டு வரும் வகையில் சட்டத்தை நிறைவேற்றி உள்ளது.
இதன்படி அங்கு சூதாட்டத்தில் சிக்குவோருக்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும்.
இதே போல் இந்தியாவிலும் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ஐ.சி.சி.யின் ஊழல் தடுப்பு பிரிவின் விசாரனை ஒருங்கிணைப்பாளர் ஸ்டீவ் ரிச்சர்ட்சன் வலியுறுத்தியுள்ளார்.
அவர் கூறுகையில், ‘இந்தியா இரண்டு மிகப்பெரிய கிரிக்கெட் போட்டிகளை நடத்த உள்ளது. 2021-ம் ஆண்டு 20 ஓவர் உலக கோப்பை போட்டியையும், 2023-ம் ஒரு நாள் போட்டி உலக கோப்பை போட்டியையும் நடத்த இருக்கிறது.
‘மேட்ச்பிக்சிங்’ மீது கடும் நடவடிக்கை எடுக்க இந்தியாவில் தனி சட்டம் இல்லை. என்றாலும் இந்திய போலீசாருடன் நல்ல உறவு வைத்துள்ளோம்.
ஆனால் அவர்களால் முழு அதிகாரத்துடன் செயல்பட முடியவில்லை. சூதாட்ட பேர்வழிகளின் செயல்பாடுகளுக்கு எங்களால் இடையூறு ஏற்படுத்த முடியும்.
அவர்கள் சுதந்திரமாக செயல்படுவதை முடிந்த அளவுக்கு தடுக்க முடியும்.
இதுவே மேட்ச் பிக்சிங்கை முடக்க இந்தியாவில் சட்டம் இருந்தால் நிலைமை தலைகீழாக மாறி விடும். சூதாட்டம் தொடர்பாக நாங்கள் 50 வழக்குகளை விசாரணை நடத்தி வருகிறோம். அதில் பெரும்பாலானவர்கள் இந்தியாவில் உள்ள சூதாட்டதரகர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள். எனவே மேட்ச் பிக்சிங் சட்டத்தை இந்தியா அறிமுகம் செய்தால், அது விளையாட்டை பாதுகாக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இப்போது கூட வீரர்களை அணுகி சூதாட்டத்தில் சிக்க வைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள 8 இந்தியர்கள் பற்றிய பட்டியலை போலீசிடமோ அல்லது மத்திய அரசிடமோ கொடுக்கலாம். ஆனால் அதற்குரிய சட்டம் இல்லாததால் அவர்கள் மீது போலீசால் ஓரளவு தான் நடவடிக்கை எடுக்க முடியும்’ என்றார்.