ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது.
இதில் கடந்த 3-ந் தேதி நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தின் போது அந்த அணி வீரர் நிதிஷ் ராணா அடித்த பந்தை டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அமித் மிஸ்ரா பிடிக்க முயற்சித்தார்.
அப்போது அவருக்கு வலது கைவிரலில் காயம் ஏற்பட்டது.
இந்த நிலையில் அவரது காயத்தை பரிசோதனை செய்து பார்த்ததில் அவருக்கு கைவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது.
இதனால் அவர் ஐ.பி.எல். போட்டி தொடரில் இருந்து விலகி இருக்கிறார்.
அவர் சிறப்பு சிகிச்சை பெற உடனடியாக நாடு திரும்புகிறார். 37 வயதான அமிஸ் மிஸ்ரா இந்த சீசனில் 3 ஆட்டங்களில் ஆடி 3 விக்கெட் வீழ்த்தினார்.
ஐ.பி.எல். வரலாற்றில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் மலிங்காவுக்கு (170 விக்கெட்) அடுத்தபடியாக 2-வது இடத்தில் இருக்கும் அமித் மிஸ்ரா 160 விக்கெட்டுகள் கைப்பற்றி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் கடந்த 2-ந் தேதி நடந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர்குமார் தொடையில் காயம் அடைந்து வெளியேறினார்.
அவருக்கு தசை நாரில் ஏற்பட்டு இருக்கும் பாதிப்பு குணமடைய குறைந்தபட்சம் 6 முதல் 8 வாரம் பிடிக்கும் என்று கூறப்படுகிறது.
இதனால் அவர் ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகி உள்ளார்.
அத்துடன் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கும் ஆஸ்திரேலிய தொடருக்கான இந்திய அணியிலும் அவர் இடம் பெற முடியாது என்று தெரிகிறது.