TAMIL

கர்நாடகாவுக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட்: தமிழக அணி 307 ரன்னில் ஆல்-அவுட்

86-வது ரஞ்சி கிரிக்கெட் தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.

இதில் பங்கேற்றுள்ள 38 அணிகள் 4 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.

தமிழ்நாடு-கர்நாடகா இடையிலான ஆட்டம் (பி பிரிவு) திண்டுக்கல் நத்தத்தில் நடந்து வருகிறது.முதலில் பேட் செய்த கர்நாடகா 336 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தது.

பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய தமிழக அணி 2-வது நாள் முடிவில் 4 விக்கெட்டுக்கு 165 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த நிலையில் 3-வது நாளான நேற்று தொடர்ந்து விளையாடிய தமிழக அணி முதல் இன்னிங்சில் 109.3 ஓவர்களில் 307 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.



தினேஷ் கார்த்திக் சதம் (113 ரன், 235 பந்து, 16 பவுண்டரி) அடித்த போதிலும் முதல் இன்னிங்சில் முன்னிலை பெற முடியவில்லை. கர்நாடகா சுழற்பந்து வீச்சாளர் கிருஷ்ணப்பா கவுதம் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

அடுத்து 29 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய கர்நாடகா ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுக்கு 89 ரன்கள் எடுத்துள்ளது.

இதில் மயங்க் அகர்வால் (8 ரன்), கேப்டன் கருண் நாயர் (5 ரன்) ஒற்றை இலக்கத்தில் வீழ்ந்ததும் அடங்கும். இன்று 4-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.


வதோதராவில் நடக்கும் பரோடாவுக்கு எதிரான (பி பிரிவு) ஆட்டத்தில் 124 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை நேற்று ஆடிய மும்பை பேட்ஸ்மேன்கள் ரன்வேட்டை நடத்தினர்.

இளம் வீரர் பிரித்வி ஷா 202 ரன்களும் (179 பந்து, 19 பவுண்டரி, 7 சிக்சர்), கேப்டன் சூர்யகுமார் யாதவ் 102 ரன்களும் (70 பந்து, 12 பவுண்டரி, 5 சிக்சர்) விளாசினர்.

ரஹானே 9 ரன்னில் எல்.பி.டபிள்யூ. ஆனார். மும்பை அணி 4 விக்கெட்டுக்கு 409 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தது.

இதன் மூலம் நிர்ணயிக்கப்பட்ட 534 ரன்கள் இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய பரோடா 3 விக்கெட்டுக்கு 74 ரன்களுடன் தடுமாறிக்கொண்டிருந்தது.



பாட்னாவில் நடந்த ஆட்டத்தில் (பிளேட் பிரிவு) புதுச்சேரி அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் பீகாரை பந்தாடியது.

2-வது இன்னிங்சில் 4 விக்கெட்டுகள் வீழ்த்திய புதுச்சேரி வேகப்பந்து வீச்சாளர் வினய்குமாரின் ஒட்டுமொத்த விக்கெட் எண்ணிக்கை 401 ஆக உயர்ந்தது.

இதன் மூலம் ரஞ்சி வரலாற்றில் 400 விக்கெட் வீழ்த்திய 2-வது வேகப்பந்து வீச்சாளர் என்ற சிறப்பை பெற்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker