TAMIL

கராச்சி டெஸ்ட் கிரிக்கெட்: வெற்றியின் விளிம்பில் பாகிஸ்தான் அணி

பாகிஸ்தான் – இலங்கை அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கராச்சியில் நடந்து வருகிறது.

இதில் முதல் இன்னிங்சில் பாகிஸ்தான் 191 ரன்னும், இலங்கை 271 ரன்னும் எடுத்தன.

80 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்சை ஆடிய பாகிஸ்தான் 3-வது நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 395 ரன்கள்
எடுத்திருந்தது.



தொடக்க ஆட்டக்காரர்கள் ஷான் மசூத் (135 ரன்), அபித் அலி (174 ரன்) சதம் அடித்தனர்.

கேப்டன் அசார் அலி 57 ரன்னுடனும், பாபர் அசாம் 22 ரன்னுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர்.

இந்த நிலையில் 4-வது நாளான நேற்று தொடர்ந்து ஆடிய அசார் அலி தனது 16-வது சதத்தை நிறைவு செய்தார். கேப்டனாக அவரது முதல் சதம் இதுவாகும்.

அசார் அலி 118 ரன்களில் (157 பந்து, 13 பவுண்டரி) ஸ்டம்பிங் செய்யப்பட்டார். பாபர் அசாமும் தனது பங்குக்கு சதம் அடித்து அசத்தினார்.



பாகிஸ்தான் அணி 2-வது இன்னிங்சில் 131 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 555 ரன்கள் குவித்து ‘டிக்ளேர்’ செய்தது.

தனது 4-வது சதத்தை எட்டிய பாபர் அசாம் 100 ரன்களுடனும் (131 பந்து, 7 பவுண்டரி, ஒரு சிக்சர்), விக்கெட் கீப்பர் முகமது

ரிஸ்வான் 21 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.

பாகிஸ்தான் அணியில் டாப்-4 வீரர்களும் சதம் அடித்து இருக்கிறார்கள்.

டெஸ்ட் வரலாற்றில் ஒரு இன்னிங்சில் முதல் 4 வீரர்களும் சதம் காண்பது இது 2-வது நிகழ்வாகும்.

இதற்கு முன்பு 2007-ம் ஆண்டு டாக்காவில் நடந்த வங்காளதேசத்துக்கு எதிரான டெஸ்டில் முதல் 4 வரிசையில் ஆடிய இந்திய
வீரர்களான தினேஷ் கார்த்திக் (129 ரன்), வாசிம் ஜாபர் (138* ரன்), ராகுல் டிராவிட் (129 ரன்) சச்சின் தெண்டுல்கர் (122*ரன்)
ஆகியோர் இவ்வாறு சதம் அடித்திருந்தனர்.



சாதனை படைத்த உற்சாகத்தோடு பாகிஸ்தான் அணி இலங்கை அணிக்கு 476 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இமாலய இலக்கை நோக்கி 2-வது இன்னிங்சை ஆடிய இலங்கை அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன.

கேப்டன் கருணாரத்னே (16 ரன்), குசல் மென்டிஸ் (0), மேத்யூஸ் (19 ரன்), தினேஷ் சன்டிமால் (2 ரன்), தனஞ்ஜெயா டி சில்வா (0)
உள்ளிட்டோர் தாக்குப்பிடிக்க முடியாமல் சீக்கிரமாகவே வெளியேறினர்.

இதன் பின்னர் மற்றொரு தொடக்க வீரர் ஒஷாடா பெர்னாண்டோவும், விக்கெட் கீப்பர் டிக்வெல்லாவும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர்.




இவர்கள் 6-வது விக்கெட்டுக்கு 104 ரன்கள் சேர்த்த நிலையில் பிரிந்தனர்.

டிக்வெல்லா 65 ரன்களில் (76 பந்து, 11 பவுண்டரி) போல்டு ஆனார்.

மறுமுனையில் ஒஷாடா பெர்னாண்டோ தனது ‘கன்னி’ சதத்தை பூர்த்தி செய்தார்.

ஆட்டம் முடியும் தருவாயில் தில்ருவான் பெரேரா 5 ரன்னில் ஆட்டம் இழந்தார்.

4-வது நாள் முடிவில் இலங்கை அணி 60.1 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 212 ரன்களுடன் தடுமாறிக் கொண்டிருந்தது.

ஒஷாடா பெர்னாண்டோ 102 ரன்களுடன் (175 பந்து, 13 பவுண்டரி) களத்தில் நிற்கிறார்.



பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் நசீம் ஷா 3 விக்கெட்டுகள் சாய்த்தார்.

இன்று 5-வது மற்றும் கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

இலங்கை அணியின் வெற்றிக்கு இன்னும் 264 ரன்கள் தேவைப்படுகிறது.

ஆனால் கைவசம் 3 விக்கெட் மட்டுமே இருப்பதால் இந்த டெஸ்டில் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவது ஏறக்குறைய உறுதியாகி விட்டது.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker