TAMIL
கபில்தேவ் மீது இரட்டை ஆதாய புகார்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ், முன்னாள் வீரர் அன்ஷூமன் கெய்க்வாட், பெண்கள் அணியின் முன்னாள் கேப்டன் சாந்தா ரங்கசாமி ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை கமிட்டி சமீபத்தில் இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ரவிசாஸ்திரியை தேர்வு செய்தது. இந்த நிலையில் அவர்கள் இரட்டை ஆதாய பதவிகளில் இருப்பதாக மத்திய பிரதேச கிரிக்கெட் சங்கத்தின் ஆயுட்கால உறுப்பினர் சஞ்சீவ் குப்தா, இந்திய கிரிக்கெட் வாரியத்தின் நெறிமுறை அதிகாரி டி.கே.ஜெயினிடம் புகார் அளித்துள்ளார். கிரிக்கெட் வாரியத்தின் புதிய விதிமுறைப்படி ஒருவர் கிரிக்கெட் அமைப்பில் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட பொறுப்புகளில் இருக்கக்கூடாது. கிரிக்கெட் ஆலோசனை கமிட்டியில் உள்ள கபில்தேவ், வர்ணனையாளர், கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் உறுப்பினர் என்று பல பொறுப்புகளில் இருப்பதாக புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போல் கெய்க்வாட், ரங்கசாமி மீதும் குற்றச்சாட்டு கூறப்பட்டு உள்ளது. இந்த சர்ச்சை குறித்து வருகிற 10-ந்தேதிக்குள் விளக்கம் அளிக்கும்படி மூன்று பேருக்கும் நெறிமுறை அதிகாரி டி.கே.ஜெயின் நேற்று நோட்டீஸ் அனுப்பினார்.