CRICKETIPL TAMILLATEST UPDATESNEWSTAMIL
கடைசி 3 சிக்ஸ்: கொல்கத்தாவின் தலைவிதியை மாற்றி எழுதிய ஜடேஜா- சிஎஸ்கே வெற்றி ஒரு அலசல்
துபாயில் நேற்று நடைபெற்ற போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் வெற்றி பெற்றால்தான் பிளே ஆஃப்ஸ் சுற்றுக்காக வாய்ப்பை தக்க வைத்துக் கொள்ள முடியும் என்ற நோக்கத்தில் கொல்கத்தா அணி களம் இறங்கியது.
பிளே ஆஃப்ஸ் சுற்று நுழைய முடியாவிட்டாலும் தண்ணி காட்ட வேண்டும் என்ற நோக்கத்தோடு சென்னை அணி களம் இறங்கியது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நிதிஷ் ராணாவின் (87) ஆட்டத்தால் 172 ரன்கள் அடித்தது.
பின்னர் 173 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை களம் இறங்கியது. டு பிளிஸ்சிஸ்க்கு பதிலாக இடம் பெற்ற வாட்சன் ஏமாற்றம்.
ஆனால் ஆர்சிபி-க்கு எதிராக அரைசதம் அடித்த ருத்துராஜ் கெய்க்வாட் சிறப்பாக விளையாடினார். அவருக்கு துணையாக அம்பதி ராயுடு அதிரடியாக விளையாடி 20 பந்தில் 38 ரன்கள் அடித்து ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த டோனி 1 ரன்னில் வெளியேற சென்னை அணிக்கு ஏமாற்றம். சாம் கர்ரன் அதிரடியாக விளையாட முடியாமல் திணற கெய்க்வாட் அணியை வெற்றி நோக்கி அழைத்துச் செல்ல முடிவு செய்தார். கடைசி 3 ஓவரில் 34 ரன்கள் தேவைப்பட்டது.
18-வது ஓவரை பேட் கம்மின்ஸ் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தில் ருத்துராஜ் கெய்க்வாட் 53 பந்தில் 72 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பேட் கம்மின்ஸ் இந்த ஓவரில் 4 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுக்க சென்னை அணிக்கு கடைசி 2 ஓவரில் 30 ரன்கள் தேவைப்பட்டது.
சாம் கர்ரன் 9 பந்தில் 9 ரன்னுடனும், ஜடேஜா 3 பந்தில் 2 ரன்னுடனும் இருந்தனர். 19-வது ஓவரை லூக்கி பெர்குசன் வீசினார். முதல் 3 பந்துகளில் 3 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்தார். இதனால் சென்னை அவ்வளவுதான் என ரசிகர்கள் கவலையுடன் இருக்க 4-வது பந்தை ஜடேஜ பவுண்டரிக்கு விரட்டினார்.
அடுத்த பந்தை பெர்குசன் நோ-பாலாக வீச ஜடேஜா அதில் இரண்டு ரன்கள் அடிக்க மொத்தம் 3 ரன்கள் கிடைத்தது. அதற்குப் பதிலாக வீசிய பந்தில் ஜடேஜா இமாயல சிக்சர் விளாசினார். இதனால் சென்னை ரசிகர்களுக்கு உற்சாகம் ஏற்பட்டது. அதுவரை 16 ரன்கள் கிடைத்திருந்தது. கடைசி பந்தையும் பவுண்டரி விரட்டி அசத்தினார் ஜடேஜா. இந்த ஓவரில் 20 ரன்கள் கிடைக்க சென்னை அணி வெற்றி விளிம்பிற்கு சென்றது.
ஜடேஜா ஃபயர் ஆனதால் எப்படியும் கடைசி ஓவரில் 10 ரன்கள் எடுத்து விடலாம் என சென்னை வீரர்களும் உற்சாகத்தில் இருந்தனர்.
கடைசி ஓவரை இளம் வீரர் நாகர்கோட்டி வீசினார். முதல் நான்கு பந்தில் 3 ரன்கள் மட்டுமே எடுத்தது செனனை. கடைசி 2 பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது.
5-வது பந்தை ஜடேஜா எதிர்கொண்டார். நாகர்கோட்டியின் லெந்த் டெலிவரியை டீப் மிட்விக்கெட் திசையில் இமாலய சிக்சருக்கு தூக்கி அசத்தினார் ஜடேஜா. அத்துடன் போட்டி சமன் ஆனது. கடைசி பந்தில் ஒரு ரன் தேவை. சிங்கிள் தட்டி ஒரு ரன் எடுப்பார் என்று நினைக்கையில் அந்த பந்தையும் சிக்சருக்கு தூக்கினார் ஜடேஜா. இதனால் சென்னை அணி ஸ்டன்னிங் வெற்றி பெற்று கொல்கத்தாவுக்கு பலமான செக் வைத்தது. பெர்குசனின் நோ-பால் சிக்ஸ், கடைசி இரண்டு சிக்ஸ் போட்டியை அப்படியே மாற்றிவிட்டது.
இந்தத் தோல்வியை நினைத்து பார்க்காத கொல்கத்தாவின் பிளே ஆஃப்ஸ் சுற்றுக்கு செக் வைத்தது சிஎஸ்கே. கடைசி போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தினால் 7 வெற்றிகளுடன் ரன் ரேட் அடிப்படையில் வாய்ப்பு இருந்தால் மட்டுமே பார்க்க முடியும்.