TAMIL
கடைசி 20 ஓவர் கிரிக்கெட்டில் வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றியது ஆப்கானிஸ்தான்
ஆப்கானிஸ்தான்- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 3-வது மற்றும் கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி லக்னோவில் நேற்றிரவு நடந்தது. இதில் ‘டாஸ்’ ஜெயித்து முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது. விக்கெட் கீப்பர் ரமனுல்லாஷா குர்பாஸ் 79 ரன்கள் (52 பந்து, 6 பவுண்டரி, 5 சிக்சர்) திரட்டினார். தொடர்ந்து ஆடிய உலக சாம்பியனான வெஸ்ட் இண்டீஸ் அணியால் 20 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கு 127 ரன்களே எடுக்க முடிந்தது. ஷாய் ஹோப் (52 ரன்) அரைசதம் அடித்தும் பலன் இல்லை. நட்சத்திர வீரர்கள் ஹெட்மயர் (11 ரன்), கேப்டன் பொல்லார்ட் (11 ரன்) ஏமாற்றம் அளித்தனர்.
இதன் மூலம் 29 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 3 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முன்னதாக முதலாவது ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீசும், 2-வது ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானும் வெற்றி பெற்றிருந்தது.
அடுத்து இவ்விரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இதே மைதானத்தில் வருகிற 27-ந்தேதி தொடங்குகிறது.