TAMIL
கடைசி கட்டத்தில் கோஹ்லி அவுட்… ஹீரோவாக மாறிய இளம் வீரர்! தொடரை கைப்பற்றிய இந்தியா
மேற்கிந்திய தீவு அணிக்கெதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரை கைப்பற்றியுள்ளது.
இந்தியா-மேற்கிந்திய தீவு அணிகளுக்கிடையேயான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி கட்டாக்கில் நடைபெற்றது. நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தெரிவு செய்தது.
அதன் படி மேற்கிந்திய தீவு அணியின் துவக்க ஆட்டக்காரர்களான இவின் லிவிஸ் 21 ஓட்டங்கள், ஷாய் ஹோப் 42 ஓட்டங்களுடனும் வெளியேறினர்.
அடுத்து வந்த ரோஸ்டன் சேஸ்(38), அதிரடி வீரர் ஹெட்மயர் 37 ஓட்டங்களில் வெளியேற, பூரானுடன் ஜோடி சேர்ந்த பொல்லார்ட் தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
இதனால் ஆரம்பத்தில் ஆமை வேகத்தில் சென்ற மேற்கிந்திய தீவு அணியின் ஓட்ட விகிதம், சீரான விகிதத்தில் எகிறியது.
அதிரடியாக விளையாடிய, பூரன் 64 பந்தில் 10 பவுண்டரி, 3 சிக்சருடன் 89 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
இருப்பினும் பொல்லார்டு ஆட்டமிழக்காமல் 51 பந்தில் 3 பவுண்டரி, 7 சிக்சர்களுடன் 74 ஓட்டங்கள் விளாச, மேற்கிந்திய தீவு அணி இறுதியாக 50 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 315 ஓட்டங்கள் குவித்தது.
இந்திய அணி சார்பில் நவ்தீப் சைனி 2 விக்கெட்டும் சர்துல் தாகூர், முகமது ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதையடுத்து 316 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ரோகித்சர்மா, லோகேஷ் ராகுல் சிறப்பான துவக்கத்தை கொடுத்தனர்.
இந்த ஜோடி 122 ஓட்டங்கள் எடுத்திருந்த போது, ரோகித் சர்மா 63 ஓட்டங்களில் வெளியேறினார். இவரை தொடர்ந்து ராகுல் 77 ஓட்டங்கள், ஷ்ரேயாஸ் அய்யர்(7), ரிஷப் பாண்ட்(7) என அடுத்தடுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்தனர்.
இருப்பினும் ஒரு புறம் நங்கூரம் போல் நிலைத்து நின்று ஆடி வந்த கோஹ்லியுடன், ஜோடி சேர்ந்த ரவீந்திர ஜடேஜா ஆரம்பத்தில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
சிறப்பாக ஆடி வந்த கோஹ்லி அரைசதம் அடித்து 85 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேற, கோஹ்லி ஆட்டமிழந்ததும் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இருப்பினும் அடுத்து வந்த ஷர்துல் தாகூரை யாரும் அப்படி அடிப்பார் என்று எதிர்பார்க்கவில்லை. ஏனெனில் வந்த முதல் பந்திலே ஒரு அற்புதமான துடுப்பாட்ட வீரர் போல் அவர் பவுண்டரி விளாசினார்.
இதனால் கடைசி 3 ஓவரில் இந்திய அணிக்கு 22 ஓட்டங்கள் தேவைப்பட்டது, 48-வது ஓவரின், 3-வது பந்தை சிக்சருக்கு தூக்கிய ஷர்துல் தாகூர், 4-வது பந்தை பவுண்டரிக்கு விரட்டினார்.
இதனால் இந்தியாவுக்கு 15 ஓட்டங்கள் கிடைத்ததால் இந்தியாவின் வெற்றி உறுதியானது.
அதன் பின் 12 பந்தில் 7 ஓட்டங்கள் என்ற போது போது, 49-வது ஓவரின் 2-வது பந்தை ஜடேஜா பவுண்டரிக்கு விரட்டினார்.
5-வது பந்தை நோ-பாலாக வீச இந்தியா 48.4 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 316 ஓட்டங்கள் அடித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.