TAMIL
கடும் விமர்சனத்தின் எதிரொலி… எதிர்வரும் உலகக் கோப்பையில் அதிரடி மாற்றம்! ஐசிசி முக்கிய அறிவிப்பு
2021ம் ஆண்டு நியூசிலாந்தில் நடைபெறவுள்ள மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பை தொடரின் இரண்டு அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டிகளுக்கு ‘ரிசர்வ் டே’ இருக்கும் என ஐசிசி உறுதி செய்துள்ளது.
சமீபத்தில் அவுஸ்திரேலியாவில் நடந்து முடிந்த மகளிருக்கான டி–20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் சிட்னியில் நடக்க இருந்த அரையிறுதியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோத இருந்தன.
ஆனால் மழையால் இப்போட்டி கைவிடப்பட்டது.
லீக் சுற்றில் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
‘நாக்–அவுட்’ போட்டிக்கு ‘ரிசர்வ் டே’ இல்லாதது குறித்து கடும் விமர்சனம் எழுந்தன.
இந்நிலையில் இன்று ஐசிசி 2021 மகளிர் 50 ஓவர் உலகக் கோப்பைக்கான அட்டவணையை வெளியிட்டது.
நியூசிலாந்தில் உள்ள 6 மைதானங்களில் 31 போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 2021 பெப்ரவரி 6ம் திகதி ஆக்லாந்தில் முதல் போட்டி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியா, முன்னாள் சாம்பியன் இங்கிலாந்து, தென் ஆப்பரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் இத்தொடரில் விளையாடவுள்ளதை உறுதி செய்துள்ளன.
மீதமுள்ள 4 அணிகள் எதிர்வரும் தொடரிகளின் மூலம் உறுதிசெய்யப்படுவார்கள் என ஐசிசி அறிவித்துள்ளது.