TAMIL

கங்குலியை போல் டோனி, விராட் கோலி எனக்கு ஆதரவு அளிக்கவில்லை – யுவராஜ்சிங் குற்றச்சாட்டு

2000-ம் ஆண்டு நடந்த சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் கென்யாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் அறிமுக வீரராக களம் கண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல்- ரவுண்டர் யுவராஜ்சிங் கடந்த ஆண்டு (2019) ஜூன் மாதம் சர்வதேச போட்டியில் இருந்து ஓய்வு பெற்றார்.

2007-ம் ஆண்டில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை மற்றும் 2011-ம் ஆண்டில் நடந்த ஒருநாள் உலக கோப்பை போட்டிகளில் சாம்பியன் பட்டம் வென்ற டோனி தலைமையிலான இந்திய அணியில் முக்கிய பங்கு வகித்தவர் யுவராஜ் சிங் ஆவார்.



அவர் 2011-ம் ஆண்டு உள்ளூரில் நடந்த ஒருநாள் உலக கோப்பை போட்டியில் தொடர் நாயகன் விருது பெற்றும் அசத்தினார்.

முன்னாள் அதிரடி ஆட்டக்காரரான 38 வயது யுவராஜ்சிங் அளித்த ஒரு பேட்டியில் கூறியதாவது:

‘நான் சவுரவ் கங்குலி தலைமையின் கீழ் இந்திய கிரிக்கெட் அணியில் விளை யாடி இருக்கிறேன். அப்போது அவர் எனக்கு நிறைய ஆதரவு அளித்து இருக்கிறார்.

பிறகு டோனி கேப்டன் பொறுப்பை ஏற்றார். கேப்டன்ஷிப்பில் கங்குலி, டோனி ஆகியோரில் யார் சிறந்தவர் என்று பிரித்து பார்ப்பது கடினம். சவுரவ் கங்குலி தலைமையின் கீழ் ஆடிய ஆட்டங்களே எனது மனதில் அதிகம் நினைவில் இருக்கிறது.

அந்த அளவுக்கு எனக்கு அவர் ஆதரவாக இருந்தார்.

அதுபோன்ற ஆதரவு எனக்கு டோனி, விராட்கோலி ஆகியோர் கேப்டனாக இருக்கையில் கிடைக்கவில்லை.

தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியினர் களத்துக்கு வெளியே எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சமாளிக்க நல்ல மனோதத்துவ ஆலோசகர் அவசியமாகும்.



வாழ்க்கையில் வீரர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகள் களத்தில் எதிரொலிக்கும். அதனை சரி செய்ய முன்பு இருந்தது போல் இந்திய கிரிக்கெட் அணிக்கு மனோதத்துவ நிபுணரை நியமித்தால் நன்றாக இருக்கும்.

கொரோனா வைரஸ் தாக் கம் காரணமாக உலகம் முழுவதும் அதிக அளவில் மக்கள் பலியாகி வருவதும், இந்த நோய் வேகமாக பரவி வருவதும் இதயத்தை நொறுக்குகிறது.

இதனை கண்டு மக்கள் பதற்றம் அடையாமல், உலக சுகாதார அமைப்பு மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தை பார்த்தால் சரியான வழிகாட்டுதல் கிடைக்கும்.

எனக்கு புற்று நோய் பாதித்த போது தொடக்கத்தில் நானும் பதற்றம் அடைந்தேன்.

ஆனால் எனக்கு சரியான தகவல்கள் கிடைத்ததால் சரியான டாக்டர் மற்றும் ஆஸ்பத்திரிக்கு சென்றேன்.

அரசு மற்றும் அதிகாரபூர்வ இணையதளங்கள் உங்களுக்கு சரியாக வழிகாட்டும் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.



கொரோனா வைரஸ் குறித்து சமூக வலைதளங்களில் பரவலாக தவறான தகவல்கள் பரவி வருகிறது. எனவே மக்கள் சமூக வலை தளங்களை பார்ப்பதை தவிர்த்து சரியான தகவலை அறிய முயற்சிக்க வேண்டும்.

இவ்வாறு யுவராஜ் சிங் கூறினார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker