TAMIL
கங்குலியை போல் செயல்படுகிறார், கோலி – ஜாகீர்கான் சொல்கிறார்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர்கான் அளித்த ஒரு பேட்டியில், ‘தற்போதைய இந்திய கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. பும்ரா, முகமது ஷமி, இஷாந்த் ஷர்மா, புவனேஷ்வர்குமார், நவ்தீப் சைனி உள்ளிட்ட வீரர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சு அசுர பலம் கொண்டு இருப்பதை உலகுக்கு நிரூபித்து வருகிறார்கள். வெளிநாட்டு மண்ணில் நமது அணியால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கையை சவுரவ் கங்குலி ஏற்படுத்தினார். களத்தில் அவரது ஆக்ரோஷமான செயல்பாடு நம்மை கவர்ந்து அதனை பின்பற்ற வழிவகுத்தது. விராட்கோலி நிறைய விஷயங்களில் முன்னாள் கேப்டன் கங்குலியை போல் செயல்படுகிறார். ஆக்ரோஷமாக செயல்படக்கூடிய அவர் முடிவுகளை தைரியமாக எடுத்து வருகிறார். நெருக்கடியான நிலையிலும் கூட விராட்கோலி அணிக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் செயல்படுகிறார். அத்துடன் அவருடைய பேட்டிங் திறமை அணியை வழிநடத்துவதில் பிரதிபலிக்கிறது. அவர் ஒருநாளில் நமக்கு உலக கோப்பையை வென்று தருவதை பார்க்க விரும்புகிறேன்’ என்றார்.