TAMIL

ஓய்வு முடிவுக்கு தள்ளாதீர்: டோனியால் இன்னும் இந்திய அணிக்கு பங்களிப்பு செய்ய முடியும் – இங்கிலாந்து முன்னாள் கேப்டன் நம்பிக்கை

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் டோனி கடந்த ஆண்டு ஜூலை மாதம் இங்கிலாந்தில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் போட்டிக்கு பிறகு எந்த போட்டிகளிலும் பங்கேற்கவில்லை.

அவர் சர்வேதச கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவாரா அல்லது ஓய்வு பெறு வாரா என்பது குறித்து எதுவும் சொல்லாமல் தொடர்ந்து மவுனம் காத்து வருகிறார்.


ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் டோனி சிறப்பாக ஆடினால் ஆஸ்திரேலியாவில் அக்டோபர்-நவம்பரில் நடக்கும் 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு இருப்பதாக பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியிருந்தார்.

ஆனால் கொரோனா அச்சத்தால் இந்த ஆண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் ரத்தாகும் சூழல் காணப்படுகிறது. ஐ.பி.எல். போட்டி நடக்காமல் போனால் டோனியின் மறுபிரவேசம் நிச்சயம் சிக்கலாகி விடும்.

இந்த நிலையில் 38 வயதான டோனிக்கு ஆதரவாக இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் உசேன் குரல் கொடுத்துள்ளார்.

தொலைக் காட்சி ஒன்றுக்கு நாசர் உசேன் அளித்த ஒரு பேட்டியில், ‘ஒருமுறை டோனி ஓய்வு பெற்று விட்டால், அதன் பிறகு அவரை மீண்டும் அணிக்கு கொண்டு வர முடியாது.

கிரிக்கெட் விளையாட்டில் உலகமே போற்றக் கூடிய ஒரு சில ஜாம்பவான்களே இருக்கிறார்கள்.

அத்தகைய மகத்தான வீரர்களை அரிதாக, அதாவது தலை முறைக்கு ஒருவரைத் தான் பார்க்க முடியும். அப்படிப்பட்ட டோனியை அவசரப்பட்டு முன்கூட்டியே ஓய்வு பெற வைத்து விடாதீர்கள்.


டோனியின் மனதில் என்ன உள்ளது என்பது அவருக்கு மட்டுமே தெரியும். எது எப்படியோ அவர் மீண்டும் களம் இறங்குவது தேர்வாளர்களின் கையில்தான் உள்ளது.

இந்திய அணிக்கு மீண்டும் தேர்வாகும் அளவுக்கு டோனியிடம் இன்னும் போதுமான திறமை இருக்கிறதா? என்ற கேள்வி மட்டுமே இங்கு எழ வேண்டும்.

சொல்லப்போனால் அணிக்கு தேர்வாக வேண்டிய எல்லா வீரர்களுக்குமே இந்த கேள்வி பொருந்தும்.

நான் டோனியை பார்த்தவரையில், அவரால் இந்திய கிரிக்கெட்டுக்கு இன்னும் நிறைய பங்களிப்பு அளிக்க முடியும் என்று நினைக்கிறேன்.

உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் போது ஒரு சில ஆட்டங்களில் இலக்கை விரட்டும் போது டோனி சோபிக்க தவறியிருக்கலாம்.


ஆனாலும் அவரிடம் இன்னும் திறமை இருக்கிறது.’ என்றார்.

Related Articles

Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker