TAMIL
ஒலிம்பிக் ஆண்கள் ஆக்கி: ஒரே பிரிவில் இந்தியா, ஆஸ்திரேலியா
ஒலிம்பிக் விளையாட்டு போட்டி அடுத்த ஆண்டு (2020) ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடக்கிறது. இதில் ஆக்கி பந்தயத்தில் ஆண்கள் பிரிவில் 12 அணிகள் கலந்து கொள்கின்றன. அவை இரண்டு பிரிவாக பிரிக்கப்பட்டு அந்த விவரத்தை சர்வதேச ஆக்கி சம்மேளனம் நேற்று வெளியிட்டது.
இதன்படி முன்னாள் சாம்பியனான இந்திய அணி ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. இந்த பிரிவில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா, ‘நம்பர் ஒன்’ அணியான பலம் வாய்ந்த ஆஸ்திரேலியா, ஸ்பெயின், நியூசிலாந்து, ஜப்பான் ஆகிய அணிகளும் அங்கம் வகிக்கின்றன. ‘பி’ பிரிவில் உலக சாம்பியன் பெல்ஜியம், நெதர்லாந்து, ஜெர்மனி, இங்கிலாந்து, கனடா, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் உள்ளன.
ஒலிம்பிக் பெண்கள் ஆக்கியில் இந்தியா ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்து, ‘நம்பர் ஒன்’ அணியான நெதர்லாந்து, ஜெர்மனி, அயர்லாந்து, தென்ஆப்பிரிக்கா ஆகிய அணிகளுடன் இடம்பிடித்துள்ளது. ‘பி’ பிரிவில் ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா, நியூசிலாந்து, ஸ்பெயின், சீனா, ஜப்பான் ஆகிய அணிகள் இருக்கின்றன.