TAMIL
ஒரே போட்டியில் 5 வீரர்கள் அரைசதம்: அபார வெற்றி பெற்ற இந்திய அணி!
நியூசிலாந்து அணிக்கெதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது.
இந்த நிலையில் ஆக்லாந்தில் நடைபெற்ற முதல் டி20 போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய நியூசிலாந்து அணியின் துவக்க ஆட்டக்கார்கள் மார்ட்டின் குப்டில் 30(19 பந்துகளில்) – கொலின் மன்ரோ 59(42 பந்துகளில்), ஆரம்பம் முதலே அதிரடி காட்ட ஆரம்பித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டிற்கு 80 ரன்களை சேர்த்தது.
இதனையடுத்து களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் 26 பந்துகளில் 51 ரன்களை எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதற்கிடையில் களமிறங்கிய கொலின் டி கிராண்ட்ஹோம் ரன் ஏதும் எடுக்காமல் விக்கெட்டை பறிகொடுத்திருந்தாலும் கூட, 4வது விக்கெட்டிற்கு களமிறங்கிய ரோஸ் டெய்லர் 27 பந்துகளில் 54 ரன்களை எடுத்து அணியை வலுவான நிலைக்கு கொண்டு சென்றார்.
இதன்மூலம் அந்த அணியானது 20 ஓவர்கள் முடிவில், 5 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை குவித்தது.
இதனையடுத்து 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்கிற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியில் துணைக்கேப்டன் ரோகித்சர்மா 7 ரன்கள் எடுத்திருந்த போது விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
அதன்பிறகு களமிறங்கிய இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி எதிர்முனையில் களமிறங்கிய துவக்க வீரர் லோகேஷ் ராகுல் உடன் இணைந்து நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார்.
சீரான இடைவெளியில் அவ்வப்போது எல்லைக்கோட்டை நோக்கியும் பந்துகள் விரட்டப்பட்டதால் அணியின் ரன்களும் கணிசமாக உயர்ந்தது. லோகேஷ் ராகுல் 56 ரன்களும், விராட்கோஹ்லி 45 ரன்களும் எடுத்து அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். அவர்களை தொடர்ந்து களமிறங்கிய சிவம் துபேவும் 13 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்ததால், இந்திய அணியின் நிலை கேள்விக்குறியானது.
இது ஒருபுறமிருக்க 3வது விக்கெட்டிற்கு களமிறங்கிய இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மன் ஸ்ரேயாஸ் ஐயர் 29 பந்துகளில் 58 ரன்களை எடுத்து இறுதிவரை விக்கெட்டை இழக்காமல் அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
இதன்மூலம் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
டி 20 போட்டியில் முதன்முறையாக 50+ ரன்களை கடந்த 5 வீரர்கள்:
கொலின் மன்ரோ 59
கேன் வில்லியம்சன் 51
ரோஸ் டெய்லர் 54 *
லோகேஷ் ராகுல் 56
ஸ்ரேயாஸ் ஐயர் 51 *
டி20 களில் அதிகமுறை 200 ரன்கள் இலக்கை துரத்திய அணி:
இந்தியா 4 முறை
அவுஸ்திரேலியா 2 முறை
தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, மேற்கிந்திய தீவுகள், இங்கிலாந்து, வங்கதேசம் மற்றும் கத்தார் ஆகியவை தலா ஒரு முறை.
மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்