CRICKETIPL TAMILLATEST UPDATESTAMIL
ஒரே இரவில் IPL ஹீரோவான தினக்கூலி தொழிலாளியின் மகன்
இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ.பி.எல்) போட்டிகளில் இதுவரை 11 லீக் ஆட்டங்கள் நிறைவுக்கு வந்துள்ளன. இதன் பெரும்பாலான போட்டிகளில் சிக்ஸர் மழை பொழிந்த வீரர்கள் என மாற்றி மாற்றி பார்த்து போரடித்த கண்களுக்கு, அடுத்தடுத்து யோர்க்கர்களை பார்ப்பது வரம். அதனால் தான் லசித் மாலிங்க, ஜஸ்பிரித் பும்ரா போன்ற வீரர்கள் இன்றுவரை கொண்டாடப்படுகிறார்கள்.
இம்முறை ஐ.பி.எல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிராக இரண்டு நாட்களுக்கு முன் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் வீரர் நவ்தீவ் சைனி, யோர்க்கரில் கலக்கியிருந்தார், இந்த நிலையில், நேற்றுமுன்தினம் (29) டெல்லி கெபிடல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் அணியில் இடம்பிடித்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த தங்கராசு நடராஜன் அசத்தியிருந்தார்.
இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ஓட்டங்களை குவித்தது. பின்னர் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்களை மாத்திரம் எடுத்து தோல்வியைத் தழுவியது.
ஹைதராபாத் அணியில் இடம்பெற்றுள்ள தமிழக வீரர் நடராஜன் மிக அற்புதமாகப் பந்துவீசி தனது அணியின் வெற்றிக்குப் பெரிதும் உதவினார். 4 ஓவர்கள் வீசி 25 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டை அவர் வீழ்த்தினார்.
அதிலும் போட்டியின் கடைசிப் பகுதியில் அடுத்தடுத்து யோர்க்கர் பந்துகளை வீசி கிரிக்கெட் உலகின் கவனத்தை தன் பக்கம் ஈர்த்துள்ளார் நடராஜன்.
குறிப்பாக, போட்டியில் 14ஆவது மற்றும் 18ஆவது ஓவர்களை அவர் வீசியபோது 10 யோர்க்கர் பந்துகளை வீசியதால் டெல்லி அணி ஓட்டங்களை எடுக்க முடியாமல் மிகவும் தடுமாறியது.
போட்டியின் 14ஆவது ஓவர் வரை டெல்லி அணி நிதானமாக விளையாடியது. ஹைதராபாத் அணியின் பந்துவீச்சு அப்போதுதான் தடுமாற தொடங்கியது.
ரிஷப் பண்ட், ஹெட்மேயர் இருவரும் களத்தில் நங்கூரம் போல இணைப்பாட்டத்தை அமைத்தார்கள். அதற்கு முந்தைய அபிஷேக் சர்மாவின் ஓவரில் (13ஆவது ஓவரின்) கடைசி இரண்டு பந்துகளில் அடுத்தடுத்து 2 சிக்ஸர் சென்றன. இதனால் மொத்தமாக போட்டி ஹைதராபாத்தின் கையை விட்டு சென்று விடும் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள்.
ஆனால், 14ஆவது ஓவரை வீச தமிழக வீரர் தங்கராசு நடராஜனை ஹைதராபாத் அணி அழைத்தது. ஓட்டத்தைக் கொடுப்பதை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயம். துடுப்பாட்டத்தில் ரிஷப் பண்ட் சிக்ஸ் அடிக்க தயாராக இருந்தார்.
ஆனால் முதல் பந்திலேயே யோர்க்கர் போட்டார் நடராஜன். அதற்கு அடுத்த பந்தில் மீண்டும் யோர்க்கர் போட்டார். ஆனால் அதில் பௌண்டரி சென்றது.
தனது முயற்சியை கைவிடாத நடராஜன், மூன்றாவது பந்திலும் யோர்க்கர் போட்டார். நான்காவது பந்தில் மீண்டும் யோர்க்கர் போட்டார். இரண்டு பந்திலும் தலா ஒரு ஓட்டம் மட்டுமே சென்றது. வரிசையாக நடராஜன் யோர்க்கர் போடுவதை கணித்த ரிஷப் பண்ட் கொஞ்சம் இறங்கி வந்து அடித்தாடினார்.
ஆனால், அவர் யோர்க்கர் போடுவதை விடவில்லை. மீண்டும் ஐந்தாவது பந்தில் நடராஜன் யோர்க்கர் வீசினார். அதற்கு அடுத்த பந்தையும் நடராஜன் யோர்க்கராக வீசினார். இதில் எல்லாம் இரண்டு வீரர்களும் ஒரு ஓட்டத்தை மட்டுமே அடித்தனர். அந்த ஓவரில் போட்டி மொத்தமாக ஹைதராபாத் பக்கம் திரும்பியது.
இதன் மூலம் ஒரே ஓவரில் அதிக யோர்க்கர் பந்துகளை வீசிய ஒரே வீரர் என்ற சாதனையை நடராஜன் படைத்தார்.
அதன்பின் மீண்டும் 18ஆவது ஓவரை நடராஜன் வீசினார். அந்த ஓவரில் வெறும் ஒற்றை ஓட்டங்களை மட்டுமே கொடுத்தார். அத்தோடு மார்க்ஸ் ஸ்டோனிசின் விக்கெட்டையும் எடுத்தார். கடைசி பந்தில் அவர் போட்ட துல்லியமான யோர்க்கர் மைதானத்தையே புரட்டி போட்டது.
அந்த ஓவரில் அவர் போட்ட ஐந்து பந்துகளும் சரியாக துடுப்பாட்ட வீரரின் காலிலேயே விழுந்துன. ஒவ்வொரு பந்துகளையும் 140 கிலோ மீற்றர் வேகத்தில் வீசினார்.
எதுஎவ்வாறாயினும், இம்முறை ஐ.பி.எல் தொடரில் ஹைதராபாத் அணியின் முதலாவது வெற்றிக்கு நடராஜனும் முக்கிய காரணமாக மாறிவிட்டார்.
2016 தமிழ் நாட்டு ப்ரீமியர் லீக் தொடரில் சுப்பர் ஓவரில், 6 பந்துகளில், 5 யோர்க்கர்களை வீசி, அதிரவைத்த நடராஜன், அதே யுக்தியை, நேற்றுமுன்தினம் நடைபெற்ற போட்டியிலும் கையில் எடுத்தார்.
இந்தப் போட்டியின் மூலம், ஒட்டுமொத்த முன்னாள் வீரர்களையும் ஈர்த்துவிட்டார். அதன் விளைவுதான், டுவிட்டரில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் பாராட்டுக்கள். பிரெட் லீயில் ஆரம்பித்து சேவாக், ஹர்சா போக்லே, ஸ்கொட் ஸ்டைரிஸ் என பட்டியல் பெரிதாகச் சென்று கொண்டிருக்கிறது.
தமிழ்நாட்டின், சேலம் அருகே இருக்கும் சின்னப்பாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் தங்கராசு நடராஜன்.
சரியான பயிற்சி வசதிகள் இன்றி.. நண்பர்களுடன் காடுகளில் டென்னிஸ் பந்தில் விளையாடி பயிற்சி பெற்றார். பிறகு தமிழ் நாட்டு ப்ரீமியர் லீக் போட்டிகளில் திண்டுக்கல் அணிக்காக விளையாடி கவனம் ஈர்த்தவர் தற்போது ஐ.பி.எல் சுப்பர் ஸ்டாராக உருவெடுத்துள்ளார்.
யார் இந்த நடராஜன்?
நடராஜன், சேலம் மாநகரத்தில் இருந்து 36 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள சின்னப்பாம்பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர். சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் மீது மிகுந்த ஆர்வமாக இருந்தார் நடராஜன்.
கிரிக்கெட்டின் மீதான தீவிர ஈடுபாட்டின் காரணமாக, முதன்முதலாக 2010-11ஆம் ஆண்டில் நடைபெற்ற பிஎஸ்என்எல் – தமிழ்நாட்டு கிரிக்கெட் அசோசியேசன் நடத்திய லீக் போட்டியில் பங்குபெற்றார். அதில் தனது முழுத் திறமையை வெளிப்படுத்தினார். பிறகு, ரஞ்சி கிண்ண அணியில் இடம்பிடித்தார்.
ரஞ்சி கிண்ணத்தில் களமிறங்கிய அவர் 9 போட்டிகளில் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அவரது முதல் T20i ஆட்டத்திலேயே அவரது திறமை வெளிப்பட்டது. கர்நாடகத்துக்கு எதிரான அவரது பந்துவீச்சு அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.
அப்பா ஒரு தினக்கூலி தொழிலாளி
நடராஜனின் அப்பா பாரம் தூக்குபவராக ரயில் நிலையத்தில் வேலை பார்த்தவர். தற்போது நூற்பாலையில் தினக்கூலி தொழிலாளியாக உள்ளார். அம்மா சாந்தா தள்ளு வண்டியில் மாலை நேரச் சிற்றுண்டி வியாபாரம் செய்து வருகின்றார்.
5 சகோதரர்களில் நடராஜன்தான் மூத்தவர். எனவே இளைய சகோதர, சகோதரிகளின் படிப்பு, திருமண செலவுகளை 25 வயதாகும் நடராஜனே கவனித்துள்ளார்.
கிரிக்கெட் விளையாடி வந்த வருமானத்தை கொண்டே இதை பூர்த்தி செய்துள்ளார். ஒரு சகோதரிக்கு திருமணம் முடித்துக் கொடுக்கப்பட்டுள்ளது. 2 சகோதரிகள் மற்றும் ஒரு சகோதரன் கல்லூரியில் படித்து வருகிறார்கள்.
இரண்டே ஆண்டுகளுக்குள் நடராஜனின் திறமை முன்னேற்றம் கண்டது. இதையடுத்து நடராஜன் முதல்தர கிரிக்கெட்டுக்கு தேர்வு செய்யப்பட்டார். 2015-16-இல் பெங்கால் அணிக்கு எதிராக தமிழ்நாடு அணிக்கு முதல்முறையாக அறிமுகமானார். ஆனால் இவர் பந்தை எறிவதாக சந்தேகம் எழுப்பப்பட்டது. எனவே, பந்து வீச்சு பாணியை கொஞ்சம் மாற்றி மீண்டும் முதல்தர கிரிக்கெட்டுக்குள் நுழைந்தார்.
அதிலும் குறிப்பாக, சோதனையான அந்த காலகட்டத்தில், பந்து வீச்சுப் பாணியை மாற்றுவதற்கு முன்னாள் தமிழ்நாடு பந்துவீச்சாளர் சுனில் சுப்ரமணியம் உதவினார்.
தமிழக கிரிக்கெட் வீரர்கள் நலனுக்காக தொடங்கப்பட்ட தமிழ் நாட்டு ப்ரீமியர் லீக் தொடர் இவருக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.
குறிப்பாக, ஒரு போட்டியில் சுப்பர் ஓவரில் 6 யோர்க்கர்கள் வீசி பிரமிப்பூட்டினார். அதன் பிறகு நடைபெற்ற 2017 ஐ.பி.எல் ஏலத்தில் 3 கோடி கொடுத்து இவரை ஏலத்தில் எடுத்தது.
அத்தொடரில் சிறப்பாக விளையாடாவிட்டாலும் தனக்கு கிடைத்த வருமானத்தின் மூலமாக பல நல்ல காரியங்கள் செய்தார். ஆடம்பர செலவுகள் செய்யாமல் தனது குடும்பத்திற்கான தேவைகளை முதலில் பூர்த்தி செய்தார். தன் உடன் பிறந்தவர்களின் கல்விச் செலவினை கவனித்து கொள்கிறார்.
அத்தோடு நின்றுவிடாமல் தனது கிராமத்தில் தன்னை போல் உள்ள பல திறமையான வீரர்கள் முறையான பயிற்சி மேற்கொள்ள கிரிக்கெட் அகடமி ஒன்றை தொடங்கினார்.
இதன்மூலம் பயனடைந்த பல வீரர்களில் முக்கியமான ஒருவர் கடந்த வருடம் நடைபெற்ற தமிழ்நாடு ப்ரீமியர் லீக்கில் கலக்கிய பெரியசாமி. அவர் தமிழ்நாட்டின் மாலிங்க என்றழைக்கப்படுகின்ற வீரர். இது நடராஜனுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி.
தற்போது இவருடைய அகடமியில் கிட்டத்தட்ட 60 வீரர்கள் பயிற்சி பெறுகின்றனர். இதற்காக பல தமிழக வீரர்கள் உதவி செய்து வருகின்றார்கள்.
வாய்ப்புகள் கிடைக்காமல் கிட்டத்தட்ட கிரிக்கெட்டில் இருந்து ஒதுங்கிய பெரியசாமி தற்போது டுபாயில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியுடன் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
எனவே, வறுமையை வென்று கிரிக்கெட்டில் சாதித்து வருகின்ற நடராஜன், பல வீரர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்து வருகின்றார்.
அதுமாத்திரமின்றி, தனக்கு கிடைத்த வாய்ப்புகளை வீணடிக்காமல் சிறப்பாக பந்துவீசி அசத்தி வருகிறார். இதேபோல், தொடர்ந்து சிறப்பாக விளையாடி இந்திய அணியில் இடம்பிடிக்க வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.